தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் தங்கும் விடுதி பொதுமக்கள் கோரிக்கை

அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளைப் பார்வையிட வருகை தரும் உறவினர்கள் இரவு நேரங்களில் தங்குவதற்கு விடுதி வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எஸ். பாண்டியன்

அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளைப் பார்வையிட வருகை தரும் உறவினர்கள் இரவு நேரங்களில் தங்குவதற்கு விடுதி வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

திருவள்ளூர் மாவட்ட தலைமை பொது மருத்துவமனையில், நோயாளிகள் சிறப்புப் பிரிவு, நவீன அறுவை சிகிச்சைப் பிரிவு, பச்சிளங் குழந்தைகள் சிறப்புப் பிரிவு, மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பிரிவு, நவீன இருதய அறுவை சிகிச்சை அரங்கம், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், உணவுக் கூடம், சலவைக் கூடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. 

இந்த மருத்துவமனைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதேபோல், முன்னூறுக்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், வெளிநோயாளிகளாக நாள்தோறும் 850 பேர் வரை சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். 

சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வரும் உறவினர்கள் அமர்வதற்குக் கூட போதுமான இடவசதி இல்லாத நிலையிருக்கிறது. 

அதேபோல், குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வளாகம் போன்றவை இல்லாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

நோயாளிகளைப் பார்வையிட வரும் உறவினர்கள் தங்குவதற்கு வசதி இல்லை. எனவே இரவில் மருத்துவமனை வளாகத்தில் திறந்த வெளியில் அவர்கள் உறங்கும் நிலை உள்ளது. இதனால் கொசுக்கடி உள்ளிட்ட தொல்லைகளால் அவதிப்படுகின்றனர். மேலும், பாதுகாப்பற்ற சூழ்நிலையும் உள்ளதால் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். 

எனவே, நோயாளிகளைக் காண வரும் உறவினர்கள் தங்கும் வகையில் மருத்துவமனை வளாகத்தில் அனைத்து வசதியுடன் கூடிய தங்கும் விடுதி கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். 

இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மருத்துவமனை நிர்வாகம், தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் மூலம் தங்கும் விடுதி அமைத்துக் கொடுக்கும்படி நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தது. 

அதையடுத்து, மருத்துவமனை வளாகத்தில் தங்கும் விடுதி அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து நகராட்சி மூலம் அனுப்பி வைக்குமாறு அரசு உத்தரவிட்டது. 

இதைத் தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்தில் அதற்கான இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் செந்தில் குமரன் கூறுகையில், தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டம் மூலம் மருத்துவமனை வளாகத்தில் நவீன வசதியுடன் கூடிய தங்கும் விடுதியை அமைக்க ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், சுமார் 60 பேர் தங்கிக் கொள்ளும் வகையில் படுக்கைகள், உணவுக் கூடம், கழிப்பறை உள்ளிட்ட சுகாதார வசதி ஆகியவை அமைக்கும் பணி தொடங்க இருக்கிறது. இப்பணியை வரும் 6 மாதங்களுக்குள் முடித்து விடுதியை பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருக்கிறோம் என்றார்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT