டெங்குக் கொசுவை கண்டுபிடிக்கும் அறிகுறிகள் உங்களுக்குத் தெரியுமா?
கோடை வெயிலில் டெங்கு கொசுவெல்லாம் எங்கங்க இருக்கு என்று கேட்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சித் தகவல் என்னவென்றால், டெங்கு காய்ச்சல் மீண்டும் பரவத் தொடங்கியிருக்கிறது என்பதே.
சென்னை: கோடை வெயிலில் டெங்கு கொசுவெல்லாம் எங்கங்க இருக்கு என்று கேட்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சித் தகவல் என்னவென்றால், டெங்கு காய்ச்சல் மீண்டும் பரவத் தொடங்கியிருக்கிறது என்பதே.
இந்த ஆண்டின் ஏப்ரல் 29ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் மட்டும் 1,451 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதித்துள்ளது. இதில் ஒரு உயிர் பலியும் அடங்கும்.
டெங்கு கொசு பாதிப்பு குறித்து தகவல் அறிந்ததும், தமிழக சுகாதாரத் துறை உடனடியாக அவசரகால நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
Advertisement
பொது சுகாதாரத் துறை இயக்குநர் கே. குழந்தைசாமி செய்தியாளரிடம் பேசுகையில், டெங்கு ஒழிப்புப் பணி தீவிரம் அடைந்துள்ளது. கொசு ஒழிப்புக்காக கொசு மருந்துகள் தெளிப்பு மற்றும் லார்வா முட்டைகளை ஒழிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. தற்போதையை சூழ்நிலையை கவனமாக உற்றுநோக்கி வருகிறோம்.
டெங்கு கொசுக்கள் உற்பத்தி எங்கும் காணப்படவில்லை. ஆனால், மனிதர்களிடம் டெங்கு பாதிப்பு உள்ளது. எனவே, டெங்கு பரவல் தற்போது மனிதர்கள் - டெங்கு கொசு - மனிதர்கள் என பரவும் ஆபத்தும் உள்ளது.
சில இடங்களில் டெங்கு பாதிப்பு இல்லாத போதும், ஏராளமான டெங்கு கொசுக்களும், லார்வா புழுக்களும் காணப்படுகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள வெக்டார் கண்ட்ரோல் அண்ட் ஸுனோசெஸ் மையத்திற்கு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொசுக்கள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றார்.
முன்பெல்லாம் மழைக் காலங்களில் மட்டுமே டெங்கு காய்ச்சல் பரவும். ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது. தற்போது ஆண்டு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. ஒரு டெங்கு காய்ச்சல் பதிவானாலே, உடனடியாக அப்பகுதியில் டெங்கு கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து விடுகிறது என்று கூறுகிறார் விழுப்புரத்தில் கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்.
பொதுமக்கள் அனைவரும் தங்களது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
சரி டெங்கு எப்படி பரவுகிறது? டெங்கு கொசு எப்படி இருக்கும்??
டெங்கு கொசு மனிதர்களைக் கடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுகிறது.
டெங்கு கொசுவை எளிதாக அடையாளம் கண்டுவிடலாம். அது உருவத்தில் பெரியதாக இருக்கும். வெள்ளை மற்றும் கருப்பு நிறத்திலான கோடுகள் உடலில் இருக்கும்.
செயற்கையாக தேங்கும் நீரில் இவை முட்டையிடும். உதாரணமாக பாட்டில்கள், டின்கள், பூந்தொட்டிகள், தேங்காய் ஓடுகள், மரத்தின் ஓட்டைகள், டையர் மற்றும் டியூப்களில் தேங்கும் நீரில் முட்டையிடுபவை.
டெங்கு கொசு கடித்து 5 அல்லது 6 நாட்களுக்குப் பிறகு மனிதனுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்படும்.