முகப்பு
தமிழ்நாடு

வரும் 24-இல் பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டம்

தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் நாள்களை இறுதி செய்வதற்காக, அவை அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் வரும் 24-இல் நடைபெறவுள்ளது.

Updated On : 22 மே, 2018 at 2:56 AM
பகிர்:

தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் நாள்களை இறுதி செய்வதற்காக, அவை அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் வரும் 24-இல் நடைபெறவுள்ளது.
பேரவைத் தலைவர் பி.தனபால் தலைமையில் வரும் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு கூட்டம் நடக்கவுள்ளது. இந்தக் கூட்டத்தில், சட்டப் பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து இறுதி செய்யப்பட உள்ளது.
தமிழக சட்டப் பேரவை வரும் 29-இல் கூடவுள்ளது. சுமார் 25 நாள்கள் பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் வரும் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. 
அரசுத் துறைகளில் திட்டங்களைச் செயல்படுத்தவும், செலவுகளை எதிர்கொள்ளவும் துறை வாரியாக நிதி ஒதுக்கப்பட வேண்டும். இந்த நிதியை ஒதுக்க, பேரவையின் அனுமதியைப் பெறுவது அவசியம். துறை வாரியாக மானியக் கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்க சட்டப் பேரவையை வரும் 29-இல் கூட்ட பேரவைத் தலைவர் பி.தனபால் உத்தரவிட்டுள்ளார்.
குழுவில் யார் யார்?: அலுவல் ஆய்வுக் குழுவின் தலைவராக பேரவைத் தலைவர் பி.தனபால் உள்ளார். இந்தக் குழுவின் உறுப்பினர்களாக, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள் சி.சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், செல்லூர் கே.ராஜு, தங்கமணி, வேலுமணி, டி.ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், அரசு கொறடா எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் ஆளும் கட்சி சார்பில் இடம்பெற்றுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், துணைத் தலைவர் துரைமுருகன், திமுக கொறடா ஆர்.சக்ரபாணி, துணை கொறடா கே.பிச்சாண்டி, சட்டப் பேரவை காங்கிரஸ் குழுத் தலைவர் கே.ஆர். ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கே.ஏ.எம்.முகமது அபுபக்கர் ஆகியோர் எதிர்க்கட்சிகள் சார்பில் இடம்பெற்றுள்ளனர்.
அதிக நாள்கள் நடத்த...: ஒவ்வொரு நாளும் எந்தெந்தத் துறைகள் மீதான மானியக் கோரிக்கைகளை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமென அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. மேலும், பேரவை கூட்டத் தொடரை அதிக நாள்களுக்கு நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்படும் எனத் தெரிகிறது. கடந்த கூட்டத் தொடரில் அளிக்கப்பட்ட கவனஈர்ப்புத் தீர்மானங்கள், சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானங்களை இந்தக் கூட்டத் தொடரில் எடுத்து விவாதிக்கவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் எனக் கூறப்படுகிறது.
இதனிடையே, எந்தெந்த மானியக் கோரிக்கைகள் மீது எந்தெந்த கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பேசவுள்ளனர் என்பது குறித்த ஆலோசனைகளை பேரவையில் இடம்பெற்ற கட்சிகள் வரும் 24-ஆம் தேதியன்று தனித்தனியாக நடத்தவுள்ளன. ஒவ்வொரு அரசுத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திலும் பேசும் உறுப்பினர்களின் பட்டியல், சம்பந்தப்பட்ட கட்சிகளின் கொறடா சார்பில் பேரவைச் செயலகத்திடம் அளிக்கப்படும். இந்தப் பட்டியலை அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெறும் நாளன்றே அளிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.