தமிழ்நாடு

அகில இந்திய மருத்துவ இடங்களைப் பெற்றோர் தமிழக இடங்களுக்கு உரிமை கோர முடியாது: உயர் நீதிமன்றம்

DIN

முதுநிலை மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் இடங்களைப் பெற்றவர்கள் தமிழக இடங்களுக்கு உரிமை கோர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முதுநிலை மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெற்ற யோகேஷ் என்பவர் உள்பட 16 மருத்துவர்கள் தங்களை மாநில ஒதுக்கீட்டின் கீழ் நடக்கும் கலந்தாய்வுப் பட்டியலிலும் சேர்க்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 
மாநில ஒதுக்கீட்டில்...இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதன் காரணமாக வெளிமாநிலங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் இடம் கிடைத்துள்ளது. ஆனால், மாநில ஒதுக்கீட்டில் மாநில அரசு வெளியிடும் தரவரிசைப் பட்டியலில் எங்களுக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மிகச் சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் நாங்கள் விரும்பிய பாடங்களைத் தேர்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் தேர்வு பெற்றிருந்தாலும், மாநில அரசின் தரவரிசைப் பட்டியலிலும் எங்களைச் சேர்த்து, விரும்பிய பாடங்களை ஒதுக்கீடு செய்ய உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது. 
தமிழக அரசின் சார்பில், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மாநில அரசின் ஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்கள் என்றாலும், ஏதாவது ஒரு கலந்தாய்வில் மட்டுமே அவர்களால் பங்கேற்க முடியும். அகில இந்திய ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்று விட்டு, மாநில அரசின் ஒதுக்கீடு வேண்டும் என சட்ட ரீதியாக உரிமை கோர முடியாது என தெரிவிக்கப்பட்டது.
வழக்கு தள்ளுபடி: அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ""உச்ச நீதிமன்ற உத்தரவுப்படிதான் கலந்தாய்வுகள் நடைபெறுகின்றன. இந்த வழக்கின் மனுதாரர்கள் மாநில அரசின் ஒதுக்கீட்டுக்குத் தகுதியானவர்கள் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. தமிழக அரசு குறித்த நேரத்தில் தரவரிசைப் பட்டியலை வெளியிடவில்லை என குற்றஞ்சாட்ட முடியாது. அகில இந்திய ஒதுக்கீட்டில் மனுதாரர்கள் இடங்களைப் பெற்ற காரணத்தால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
கூடுதல் மருத்துவக் கல்லூரிகள்: பெருகி வரும் இந்திய மக்கள் தொகைக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற சிறப்பு மருத்துவர்களின் தேவை அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில் பட்டமேற்படிப்புக்கு விண்ணப்பிக்கும் இளம் மருத்துவர்கள் தாங்கள் 
விரும்பிய பாடங்களையும், கல்லூரிகளையும் தேர்வு செய்ய வாய்ப்பளிக்க தவறும் பட்சத்தில், அவர்களால் நாட்டுக்குச் சிறந்த சேவையை அளிக்க முடியாது. 
எனவே, நாடு முழுவதும் மருத்துவர்கள் விரும்பும் துறைகளுடன் கூடுதலான மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கவும், மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கவும் சிறந்த மருத்துவ நிபுணர்களை உருவாக்க வேண்டியது மத்திய}மாநில அரசுகளின் கடமை'' என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

SCROLL FOR NEXT