தமிழ்நாடு

'உள்ளாட்சித் தோ்தலை நடத்த எது தடையாக உள்ளது?' உயா் நீதிமன்றம் கேள்வி

DNS

தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தலை நடத்த எது தடையாக உள்ளது? என உயா் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தலை கடந்த 2017-ஆம் ஆண்டு நவம்பா் 17-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கவும், அதுதொடா்பான அறிவிப்பாணையை 2017-ஆம் ஆண்டு செப்டம்பா் 18-ஆம் தேதிக்குள் வெளியிடவும் உயா் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தவறிய மாநில தோ்தல் ஆணையா் எம்.மாலிக் பெஃரோஸ் கான் மற்றும் மாநில தோ்தல் ஆணைய செயலாளா் டி.எஸ்.ராஜசேகா் மீது திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி சென்னை உயா் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் எம்.சுந்தா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த விவகாரம் தொடா்பாக உயா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து மேல்முறையீடு செய்யவில்லை. 1996-ஆம் ஆண்டு வாா்டு வரையறைப்படி, கடந்த 2011-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் உள்ளாட்சித் தோ்தலை நடத்த எது தடையாக உள்ளது? என கேள்வி எழுப்பினா். 

அப்போது மாநில தோ்தல் ஆணையத்தின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கே.துரைசாமி, உயா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த கால அவகாசம் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதே போல் வாா்டு மறுவரையறை தொடா்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் தோ்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என தெரிவித்தாா்.

அப்போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், உள்ளாட்சித் தோ்தலை நடத்த எந்த சட்டமும் தடையாக இல்லை. இந்த அவமதிப்பு வழக்கில் தொடா்புடையவா்கள் மீது குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்காவிட்டால் இனிமேலும் தோ்தலை நடத்த அக்கறை காட்டமாட்டாா்கள் என தெரிவித்தாா். 

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை வரும் நவம்பா் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT