சென்னை: சர்கார் படப் பிரச்னை முடிவுக்கு வந்து விட்டது என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த படமானது தீபாவளி தினமான நவம்பர் 6 அன்று வெளியாகியுள்ளது.
விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு கட்டியம் கூறும் வகையில் படத்தில் சமகால அரசியலை விமர்சிக்கும் வகையில் அரசியல் கருத்துக்கள் தூக்கலாக இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில் சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள அரசின் இலவசத் திட்டங்களை விமர்சிக்கும் வகையிலான சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும்; அத்தகைய காட்சிகளுக்காக நடிகர் விஜய், படத் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மற்றும் படத்தினை திரையிட்ட திரையரங்கங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றெல்லாம் தொடர்ச்சியாக தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, கே.பி.அன்பழகன் மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் புதனன்று கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் சர்கார் திரைப்படத்திற்கு எதிராக வியாழனன்று மதுரையில் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த படம் திரையிடப்பட்டுள்ள சினிப்ரியா திரையரங்கத்தின் வெளியே இந்த போராட்டம் நடைபெற்றது. அதேபோல கோவையிலும் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கத்திற்கு வெளியே அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.
மதுரை, கோவையைத் தொடர்ந்து சென்னையிலும் சர்கார் படத்திற்கு எதிரான அதிமுகவின் போராட்டம் வியாழன் மாலை துவங்கியது. சென்னை ஜாபர்கான்பேட்டை காசி, விருகம்பாக்கம் ஐநாக்ஸ் மற்றும் குரோம்பேட்டை வெற்றி ஆகிய திரையரங்கங்களில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு கூடியுள்ள அதிமுகவினர் விஜய்க்கு எதிராக கடுமையாக கோஷங்கள் எழுப்பி வருவதோடு, திரையரங்க வாயில்களில் வைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பேனர்களை கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்பின்னர் அதிமுகவினரின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து சர்கார் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக தயாரிப்புத் தரப்பு வியாழன் இரவு ஒப்புதல் அளித்தது.
ஆனால் அதே சமயம் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளியன்று நடிகர் விஜயயின் சர்கார் படத்திற்கு எதிரான அதிமுகவினரின் போராட்டம் சேலத்தில் தொடர்ந்து நடந்து வந்தது.
இந்நிலையில் வெள்ளியன்று நண்பகல் மத்திய தணிக்கை குழு ஒப்புதலுடன் சர்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயரைக் குறிப்பிடும் 'கோமளவள்ளி' என்ற பெயர் ம்யூட் செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்ட படமானது வெள்ளி மதியம் முதல் திரையரங்கங்களில் திரையிடப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சர்கார் படப் பிரச்னை முடிவுக்கு வந்து விட்டது என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல் தெரிவித்துள்ளார்.
சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள அரசின் இலவசத் திட்டங்களை விமர்சிக்கும் வகையிலான சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கையாக இருந்தது. அது நீக்கப்பட்ட நிலையில், சர்கார் படப் பிரச்னை முடிவுக்கு வந்து விட்டது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
முன்னதாக அமைச்சர் கடம்பூர் ராஜு , தமிழக முதல்வர் பழனிசாமியை இந்த விவகாரம் தொடர்பாக சந்தித்துப் பேசினார். அதேபோல் முதல்வர் பழனிசாமியை சந்திக்க நடிகர் விஜய் நேரம் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.