தமிழ்நாடு

தமிழகம் நோக்கி "கஜா' புயல்

தினமணி

அந்தமான் கடல் பகுதியில் நிலவிய தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து "கஜா' புயலாக மாறியுள்ளது. இப்புயல் வரும் வியாழக்கிழமை கடலூருக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
 "கஜா' புயல்: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய மத்திய வங்கக்கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் சனிக்கிழமை நிலைகொண்டிருந்தது. மேற்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்த இது, மேலும் வலுவடைந்து ஞாயிற்றுக்கிழமை புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு "கஜா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்பெயரை இலங்கை வழங்கியுள்ளது. இந்த புயல் தற்போது சென்னைக்கு கிழக்கு மற்றும் வடகிழக்கே 930 கி.மீ. தொலைவிலும், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கிழக்கு மற்றும் தென்கிழக்கே 980 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
 கஜா புயல் கடலூருக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே வரும் வியாழக்கிழமை (நவ.15) முற்பகலில் கரையை கடக்கக்கூடும். இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் புதன்கிழமை (நவ.14) இரவு முதல் பலத்த காற்று வீசும். இதன் வேகம் மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வரை இருக்கும். கடல் கொந்தளிப்பாக காணப்படும்.
 மூன்றாவது புயல்: அரபிக்கடலில் "லூபன்' புயலும், வங்கக்கடலில் "டிட்லி' புயலும் கடந்த மாதம் உருவாகின. தற்போது, மூன்றாவதாக "கஜா' புயல் உருவாகியுள்ளது.
 மீனவர்களுக்கு எச்சரிக்கை: புயல் காரணமாக, மத்திய மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை (நவ.13) வரை மீனவர்கள் செல்ல வேண்டாம். அதேபோல், தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியிலும் திங்கள்கிழமை முதல் அவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் திங்கள்கிழமை கரைக்கு திரும்ப கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
 பலத்த மழை: புயல் காரணமாக, வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் புதன்கிழமை (நவ.14) இரவு முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யும். வரும் 15 - ஆம் தேதி பெரும்பாலான இடங்களில் மிதமான மழை முதல் பலத்த மழை வரை பெய்யும். ஒரு சில இடங்களில் மிக பலத்த மழை பெய்யும். கஜா புயல் கரையை கடக்கும்போது, உள்மாவட்டங்களில் மழை இருக்கும். இந்த புயல் தீவிர புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளது.
 சென்னையை பொருத்தவரை புதன், வியாழக்கிழமை ஆகிய இரண்டு நாள்களிலும் பரவலாக மழை பெய்யும். ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யும். மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றார் அவர்.
 23 சதவீதம் மழை குறைவு: தமிழகத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் தற்போது வரை 23 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது. அக்டோபர் 1 முதல் நவம்பர் 11 வரை இயல்பான மழை அளவு 260 மி.மீ. ஆனால், இதுவரை 200 மி.மீ., மழைதான் பெய்துள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

SCROLL FOR NEXT