தமிழ்நாடு

வாகன உற்பத்தி: தமிழகத்தில் ரூ.7,000 கோடி கூடுதல் முதலீடு; ஹூண்டாய் நிறுவனம் அறிவிப்பு

தினமணி

தமிழகத்தில் வாகன உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் ரூ.7,000 கோடி அளவுக்கு கூடுதல் முதலீடு செய்யப்படும் என்று ஹூண்டாய் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் ஒய்.கே.ஹூ தெரிவித்தார்.
 முதல்வருடன் சந்திப்பு: ஹூண்டாய் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் ஒய்.கே.ஹூ தலைமையிலான அந்த நிறுவனத்தின் குழுவினர், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பு சுமார் 15 நிமிஷங்கள் வரை நடைபெற்றது. அப்போது, தமிழகத்தில் கூடுதல் முதலீடுகளைச் செய்வதற்கான விருப்ப கோரிக்கைக் கடிதத்தை முதல்வரிடம் ஹூண்டாய் நிறுவனத்தினர் அளித்தனர்.
 இதைத்தொடர்ந்து, ஒய்.கே.ஹூ செய்தியாளர்களிடம் கூறியது::-
 எங்களது உற்பத்தித் திறனை மேலும் ஒரு லட்சம் அலகுகள் வரை உயர்த்த முடிவு செய்யப்பட்டிருப்பதை தமிழக முதல்வரிடம் தெரிவித்தோம். இதில், 50,000 அலகுகள் வாகனங்களின் உதிரிபாகங்களாக மட்டும் அனுப்பி வைக்கப்படும். அதாவது வாகனங்களாக உற்பத்தி செய்யாமல் அவற்றின் பாகங்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படும். எந்த நாட்டுக்கு உதிரி பாகங்கள் அனுப்பப்படுகிறதோ அந்த நாட்டில் அவை அனைத்தும் இணைக்கப்பட்டு வாகனங்களாக உருவாக்கப்படும்.
 அரசிடம் கோரிக்கை: உதிரி பாகங்கள் உற்பத்தியை அதிகரிக்கும் அதேசமயம், இதற்கான வாய்ப்பு, வசதிகளை அதிக அளவில் ஏற்படுத்தித் தர வேண்டுமென தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனமானது 10 மாடல்களில் 60 ஆயிரத்து 25 வாகனங்களை உற்பத்தி செய்யவுள்ளது. இதில், முதல்கட்டமாக உதிரி பாகங்களைப் பெற்று அவற்றை இணைத்து மின்னணு (எலக்ட்ரானிக்) வாகனங்களை தயாரிக்க உள்ளோம்.
 புரிந்துணர்வு ஒப்பந்தம்: அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் மின்னணு வாகனங்களை ஹூண்டாய் நிறுவனமே உற்பத்தி செய்யும் அளவுக்கு திட்டம் வகுத்துள்ளோம். இதன்படி, ரூ.7,000 கோடி அளவுக்கான திட்ட மதிப்பீட்டில் புதிய வாகனங்கள் தயாரிக்கப்பட்டு உற்பத்தித் திறனை அதிகரிக்கவுள்ளோம். புதிய வாகனங்களை உற்பத்தி செய்துவரும் வேளையில், அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டில், புதிய முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக அரசுடன் மேற்கொள்ளப்படும் என ஒய்.கே.ஹூ தெரிவித்தார்.
 முதல்வருடனான சந்திப்பின்போது, தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், ஹூண்டாய் நிறுவனத்தின் கம்பெனி விவகாரங்கள் பிரிவு துணைத் தலைவர் பி.சி.தத்தா, ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் உதவி துணைத் தலைவர் (நிதி) என்.ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT