முகப்பு
தமிழ்நாடு

வெற்றிலை விலை கடும் வீழ்ச்சி; விவசாயிகள் விரக்தி

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் விளைவிக்கப்படும் நாட்டு வெற்றிலை விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கடும் விரக்தியில் உள்ளனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:43 PM
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூர் பகுதியில் உள்ள நாட்டு வெற்றிலை கொடிக்காலில் வெற்றிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி.
பகிர்:


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் விளைவிக்கப்படும் நாட்டு வெற்றிலை விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கடும் விரக்தியில் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு கிலோ வெற்றிலை ரூ.200-க்கு விற்பனையான நிலையில் தற்போது அவை ரூ.40 க்கு விற்பதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் நாட்டு வெற்றிலைக்கு பிரசித்தமான திருப்புவனம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளில் வெற்றிலை சாகுபடி சரிவை சந்தித்துள்ளது. உற்பத்தி செலவு அதிகரிப்பு, நிலத்தடி நீர் மட்டம் சரிவு, விலை வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணிகளும் இதன் சாகுபடியை வெகுவாகப் பாதித்துள்ளன.

திருப்புவனம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஏறத்தாழ 1000 ஏக்கரில் நடைபெற்ற வெற்றிலை சாகுபடி, இப்போது, அதிகபட்சம் 200 ஏக்கராகச் சரிந்துள்ளது. இதனால் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

நீளமாக வளர்ந்த அகத்தி, தகரை ஆகிய மரங்களில் கொடியாக ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் வெற்றிலைச் செடித் தோட்டத்துக்கு, காற்றுக்குப் பயந்து சுற்றிலும் பாதுகாப்பான அடைப்புகள் வைக்கப்பட்டு இருக்கும். இது வெற்றிலைக் கொடிக்காலுக்கான அடையாளம். 

திருப்புவனம் புதூர் பகுதிகளில் செல்லும் நான்கு வழிச்சாலையின் இருபுறமும் இக் காட்சியை இப்போதும் பார்க்க முடியும். விளைச்சல் பருவத்திற்கு வந்தவுடன் ஆண்டு முழுவதும் வருமானம் தரும் இச்சாகுபடியில், 15 நாள்களுக்கு ஒருமுறை வெற்றிலை பறிப்பார்கள். இப் பகுதியில் விளையும் நாட்டு வெற்றிலையை சந்தைப் படுத்துவதற்கு திருப்புவனத்தில் இரண்டு வெற்றிலைக் கொடிக்கால் சங்கங்கள் உள்ளன. இங்கிருந்து தினமும் மதுரை, ராமநாதபுரம், திருச்சி,  புதுக்கோட்டை ஆகிய பகுதியில் நடைபெறும் சந்தைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

இதுகுறித்து நாட்டு வெற்றிலை சாகுபடியில் ஈடுபட்டு வரும் திருப்புவனம் புதூரைச் சேர்ந்த வி.கே.ராசுபிள்ளை(75) கூறியது: மூன்று தலைமுறைக்கும் மேலாக எங்கள் குடும்பம் வெற்றிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறது. சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருப்புவனம், புதூர், நைனார்பேட்டை, அல்லிநகரம், மடப்புரம்,  வாவியாரேந்தல், பிரமனூர், அங்காடிமங்கலம், கலுங்குபட்டி, திருப்பாச்சேத்தி, கலியாந்தூர் ஆகிய பகுதிகளில் சுமார் 1000 ஏக்கரில் வெற்றிலை சாகுபடி நடைபெற்றது. 

வெற்றிலைகளில் நாடு, சிறுகாணி, கற்பூரம் என பல ரகங்கள் உண்டு. இதில், திருப்புவனம் பகுதியில் விளையும் நாட்டு வெற்றிலைக்கு அனைத்து பகுதி மக்கள் தரப்பிலும் அதிக வரவேற்பு உள்ளது. இதன் காரணமாக, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் பிற பகுதிகளான சென்னை, திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, குடியாத்தம், ஆலங்குடி, பேராவூரணி, அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகள் மட்டுமின்றி இந்தியாவின் பிற பகுதிகளான ஆக்ரா, தில்லி, மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கும் ஏற்றுமதியாகின.

ஆனால், கடும் வறட்சி, உற்பத்தி செலவு அதிகரிப்பு, விலை வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெற்றிலை சாகுபடி பரப்பு தற்போது 200 ஏக்கரைத் தாண்டினாலே பெரிய விஷயம். இதன் மூலம் பயன்பெற்று வந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பரிதவித்து வருகின்றன.

இந்நிலையில், வேலையாள் கூலியும் பல மடங்கு உயர்ந்துள்ளது. போக்குவரத்துச் செலவு, நோய்த் தாக்குதல் மற்றும் பூச்சித் தொல்லையில் இருந்து பாதுகாக்கும் மருந்து, உரம் ஆகியவற்றின் விலைகளும் பல மடங்கு உயர்ந்திருக்கின்றன. இதனால் ஏக்கருக்கு ரூ.5 லட்சம் வரை செலவாகிறது. எனவே இவற்றைச் சமாளிக்க முடியாமல் விவசாயிகள் திணறுகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு கிலோ வெற்றிலை ரூ.200-க்கும் கூடுதலாக விற்பனை ஆனது. ஆனால் கடந்த சில வாரங்களாக ஒரு கிலோ வெற்றிலை வெறும் ரூ.40-க்கும் குறைவாகத் தான் விற்பனை ஆகிறது. இதே நிலை நீடித்தால் தற்போது பயிரிட்டுள்ள வெற்றிலை சாகுபடி பரப்பளவு மேலும் குறையும் நிலை ஏற்படும். 

தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட எந்தவொரு அரசுத் துறையில் இருந்தும் மானியமோ, பயிற்சியோ, நிவாரணமோ வெற்றிலை விவசாயிகளுக்குக் கிடையாது. அரசு எங்கள் பக்கமும் கவனத்தைத் திருப்பினால் திருப்புவனம் பகுதி நாட்டு வெற்றிலை இனி வரும் காலங்களில் மீண்டும் செழித்துத் தழைக்கும் என்கிறார் ராசுபிள்ளை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.