திண்டுக்கல்: வேலைவாய்ப்புத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்த பணிகள், கல்வித் துறை, நூலகத் துறை மற்றும் தொழிற் பயிற்சி பள்ளிகளில் பணிபுரிந்து வந்த உதவி இயக்குநர் நிலையிலான அலுவலர்களிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அந்தத் துறையை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 32 மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தொழிலாளர் நலத் துறையின் கீழ் செயல்பட்டு வந்த வேலைவாய்ப்புத் துறை, கடந்த ஆண்டு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறையுடன் இணைத்து, அரசாணை வெளியிடப்பட்டது. இத்துறையின் கீழ், தமிழகம் முழுவதும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் என சுமார் 700-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
கல்விச் சான்றிதழ்களை பதிவு செய்வதே வேலைவாய்ப்புத் துறையின் பிரதான பணியாக இருந்து வந்தது. அதேபோல், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வழங்கும் பணிகளையும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மேற்கொண்டு வந்தனர். ஆனால், 5 ஆண்டுகளுக்கு முன் சான்றிதழ் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணி இணைய வழியில் மேற்கொள்ளும் வசதி அமல்படுத்தப்பட்டபோது, வேலைவாய்ப்பு அலுவலகப் பணியாளர்களின் முக்கிய பொறுப்பு பறிபோனது. இதனிடையே, போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கும் திட்டமும், அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், நூலகத் துறை, கல்வித் துறை, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் போட்டித் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால், வேலைவாய்ப்புத் துறை நடத்தும் பயிற்சி முகாம்கள் முக்கியத்துவம் பெற முடியவில்லை. அதேபோல், வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் திறன் பயிற்சி அளிக்கும் திட்டமும், தொழிற் பயிற்சி பள்ளிகளில் பணிபுரிந்து வந்த உதவி இயக்குநர் நிலையிலான அலுவலர்களிடம் கடந்த அக்டோபர் மாதம் முதல் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. இதனிடையே, வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வழங்கும் பணிகளையும், வேலைவாய்ப்புத் துறை அலுவலர்களால் சிறப்பாகச் செயல்படுத்த முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக போட்டித் தேர்வுக்கு தயார் செய்யும் இளைஞர்கள் சதீஷ், பாலாஜி ஆகியோர் கூறியதாவது: வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு மட்டுமே அதிக அளவில் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. அதே நேரத்தில் வங்கித் துறை, ரயில்வே துறை, குடிமைப் பணித் தேர்வுகள் தொடர்பாகவும், இத்தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் ஆலோசனைகளை வழங்க வேலைவாய்ப்பு அலுவலர்களுக்குத் தெரிவதில்லை.
குறிப்பிட்ட போட்டித் தேர்வுக்கு எந்தப் பகுதியிலிருந்து அதிக வினாக்கள் கேட்கப்படும், எப்படி தயார் செய்ய வேண்டும், எதிர்மறை மதிப்பெண் (நெகடிவ் மார்க்) வழங்கப்படுமா போன்ற விவரங்களை கூட தெரியப்படுத்துவதில்லை. அதேபோல் வங்கி மற்றும் ரயில்வே துறையில் தொழில்நுட்பப் பணியாளர்கள் தேர்வு செய்யும் முறை குறித்த இளைஞர்களின் விசாரிப்புகளுக்கு பதில் கிடைப்பதில்லை எனத் தெரிவித்தனர்.
இது தொடர்பாக ஓய்வுபெற்ற வேலைவாய்ப்புத் துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது: பள்ளி மாணவர்களிடம் உள்ள தனித் திறன்களை கண்டறிவதற்கான தகுதி, வேலைவாய்ப்புத் துறையிலுள்ள இன்றைய வழிகாட்டு மற்றும் ஆலோசனை வழங்கும் அலுவலர்களுக்கு இல்லை. தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நீட் தேர்வு தொடர்பான தகவல்களில் 20% கூட வேலைவாய்ப்பு அலுவலர்களுக்கு தெரிவதில்லை. அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், மாவட்ட வழிகாட்டு மையம் என்ற பெயர் பலகை மட்டுமே நிறுவப்பட்டுள்ளது. ஆனால், சரியான வழிகாட்டுதலை வழங்கும் அளவுக்கு கல்வித் தகுதியும், அனுபவமும் அலுவலர்களுக்கு இல்லை.
வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை அளிப்பதற்கு (கைடன்ஸ் அண்ட் கவுன்சிலிங்), உளவியல் துறையில் முதுநிலைப் பட்டம் அல்லது வழிகாட்டுதலுக்கு முதுநிலை அல்லது பட்டயப் படிப்பு முடித்தவர்களால் மட்டுமே சிறப்பாகச் செயல்பட முடியும். அதேபோல், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறையுடன் இணைத்து அரசாணை வெளியிடப்பட்டு ஓராண்டு முடிந்தபோதிலும், அடுத்தக் கட்டப் பணிகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
வேலைவாய்ப்பு அலுவலகப் பணிகளான கல்வி சான்றிதழ் பதிவு, புதுப்பித்தல், கூடுதல் பதிவு போன்றவை இணைய வழியில் மேற்கொள்ளப்படுவதால், வேலைவாய்ப்பு அலுவலகங்களை தேடி வருவோரின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. இதனால், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் நண்பகலுக்கு பின் பணியாளர்கள் பலர் வெளியேறி விடுகின்றனர்.
இதுபோன்ற சூழலில் வேலைவாய்ப்பு அலுவலகங்களின் கட்டமைப்பு மற்றும் பணிகளை கட்டாயம் மறுசீரமைப்பு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.