தமிழ்நாடு

புயலை எதிர்கொண்டு நிற்கும் நெட்டை ரக தென்னை மரங்கள்!

DIN


கஜா புயலால் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் வேரோடும், முறிந்தும் விழுந்த நிலையில், நெட்டை ரக மரங்கள் மட்டும் எதிர்கொண்டு நிற்கின்றன.
இந்தப் புயல் தாக்குதலில் தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் ஏறத்தாழ 70 லட்சம் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டன. இந்தப் புயல் வேகத் தாக்குதலிலும் பாரம்பரிய வகையான நெட்டை ரக தென்னைகள் எந்தவிதப் பாதிப்புக்கும் உள்ளாகவில்லை. இதுவும் பனை மரத்தைப்போல மண்ணை இறுக்கமாகப் பிடித்து நிற்கிறது. 
நெட்டை ரகத்தில் மட்டை எந்த அளவுக்கு நீண்டு விரிகிறதோ, அந்த அளவுக்கு வேரும் விரிவடையும். எனவே, புயல், சூறாவளி என எந்த இயற்கைப் பேரிடர் நிகழ்ந்தாலும், அவற்றை எல்லாம் எதிர்கொள்ளும் இந்த மரங்கள் கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் நீடித்து நிற்கின்றன. 
இந்தப் புயல் தாக்குதலில் விழுந்த தென்னை மரங்களில் பெரும்பாலானவை உயர் விளைச்சல் ரகங்களே. பசுமைப் புரட்சி, மஞ்சள் புரட்சியைத் தொடர்ந்து, குட்டை ரகம், நெட்டை - குட்டை ரகம், குட்டை - நெட்டை ரகம் ஆகிய உயர் விளைச்சல் ரகங்கள் அறிமுகமாகின. ஆனால், இந்த ரகங்களில் வேர் அளவு மிகவும் குறைவு. இதில், 5 அடி அளவுக்குத்தான் வேர் இருக்கும் என்றும், இதன் வயது 20 முதல் 40 ஆண்டுகள்தான் எனவும் கூறப்படுகிறது. எனவே, புயல் காற்றில் இந்த மரங்கள் எதிர் கொண்டு நிற்பதில்லை. இப்போது ஏற்பட்டுள்ள பாதிப்புக்கும் இதுவே காரணம் என்கிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த இயற்கை வேளாண் அறிஞர் கோ. சித்தர்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தது:
நெட்டை ரகத்தில் 20 முதல் 25 அடி நீளத்துக்கு வேர் செல்லும். இந்தப் பாரம்பரிய ரகத்தில் நார் கட்டமைப்பு, இழைமம் (நார்) மிகவும் வலுவானது. இதன் காரணமாக, புயல் காற்று வீசினாலும் இந்த மரங்கள் நாணல்போல வளைந்து கொடுக்கும். புயலில் ஆங்காங்கே ஓரிரு மரங்கள் சாய்ந்தாலும், உயர் விளைச்சல் (குட்டை) ரகத்தைப்போல தோப்பில் உள்ள ஒட்டுமொத்த மரங்களும் சாயாது. 
அண்மையில் வீசிய கஜா புயலிலும் நெட்டை ரக மரங்கள் விழவில்லை. புயல் கரையைக் கடந்த நாகை மாவட்டத்தில்தான், அதன் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனால், நாகை அருகே செல்லூர் கிராமத்தில் தென்னந்தோப்பில் பயிரிடப்பட்டுள்ள 30 பாரம்பரிய நெட்டை ரக மரங்கள் புயலில் சாயாமல் எதிர்கொண்டுள்ளன. அதேபகுதியில் உயர் விளைச்சல் ரக தென்னை மரங்கள் சாய்ந்துள்ளன.
உயர் விளைச்சல் ரகத்தை ஒரு ஏக்கருக்கு 70 முதல் 80 மரங்களை வளர்க்கலாம். ஆனால், பாரம்பரிய நெட்டை ரகத்தில் ஒரு ஏக்கருக்கு 30 முதல் 40 மரங்களை மட்டுமே வளர்க்க முடியும். இந்த ரகத்தில் தென்னங்கன்று வளர்ந்து காய்ப்பதற்கு மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அதுவரை மண்ணுக்கும், ஈரத்தன்மைக்கும் ஏற்ப சிறு தானியங்களை ஊடு பயிராக விதைக்கலாம். மேலும், பாரம்பரியத்தைச் சார்ந்த குறுகிய கால விதை நெல் ரகங்கள், நிலக்கடலை சாகுபடி செய்யலாம். வாசனை எண்ணெய் தயாரிக்க பயன்படும் புல் ரகத்தை சாகுபடி செய்து 50 நாட்களில் அறுவடை மேற்கொள்ளலாம். 
இந்த ரக தென்னையில் நோய், பூச்சி தாக்குதல் இருக்காது. இதில், ஒரு மரத்துக்கு 50 நாட்களுக்கு ஒருமுறையும், ஆண்டுக்கு 7 முறையும் என மொத்தம் ஏறத்தாழ 1,400 காய்கள் கிடைக்கும். குட்டை ரகத்தில் (உயர் விளைச்சல்) இடுபொருட்கள் செலவு அதிகம். இதை ஒப்பிடும்போது நெட்டை ரகத்தில் கிடைக்கும் வருவாயும் குட்டை ரகத்தில் பெறக்கூடிய வருமானமும் ஒரே மாதிரியாக இருக்கிறது.
பாரம்பரிய நெட்டை ரகத்தில் கோம்பைக்காய், பட்டுக்கோட்டை காய், யாழ்ப்பாணக்காய் என பல்வேறு வகைகள் உள்ளன. இவையெல்லாம் அந்தந்த பகுதிக்கேற்ப நீடித்து, செழுமையாக வளரக்கூடியது. எனவே, தங்களது பகுதிக்கு ஏற்ற வகைகளையே நம் முன்னோர்கள் பயிரிட்டு வந்தனர். அதனால்தான் ஊர் பெயரை ரகங்களுக்குச் சூட்டியுள்ளனர்.
இந்தப் புயலைப் பொருத்தவரை தென்னை விவசாயிகள் ஒரு பாடத்தைக் கற்றுக் கொள்ள வாய்ப்புக் கிடைத்துள்ளது. ஆனால், தென்னையே வேண்டாம் என அப்புறப்படுத்தக் கூடாது. தெரியாத கடவுளை விட தெரிந்த தேவதை மேல் என்பதுபோல, புதிய சாகுபடிக்குப் பதிலாக ஏற்கெனவே மேற்கொண்டு வந்த பயிரையே மேற்கொள்வது சரியானது. எனவே, தென்னை சாகுபடி செய்யப்பட்ட இடத்தில் மீண்டும் தென்னையைப் பயிரிடுவதே சரியானது. அதேநேரம் தேர்வு செய்யப்படுகிற ரகம், விதையை முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார் சித்தர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT