தமிழ்நாடு

வயது 25-ஐ கடந்தாலும் நீட் எழுதலாம்: விண்ணப்பிக்க மேலும் ஒரு வாரம் அவகாசம்

DIN


2019ஆம் ஆண்டு, மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதிகாண் (நீட்) தேர்வை 25 வயதுக்கு மேற்பட்டோரும் எழுதலாம் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.
எனினும், அதுபோன்று தேர்வு எழுதுபவர்களின் முடிவு, இந்த வழக்கின் இறுதி உத்தரவைப் பொருத்தே அமையும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதியை ஒரு வாரத்துக்கு நீட்டித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, எல். நாகேஸ்வர ராவ், ஆர். சுபாஷ் ரெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவின் விவரம்:
நீட் தேர்வை எழுத விரும்பும் 25 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையோர், 2019-ஆம் ஆண்டு இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கவும், தேர்வை எழுதவும் உரிமையுடையவர்களாவர். 
எனினும், இந்த வழக்கின் இறுதி உத்தரவைப் பொருத்தே அவர்களது தேர்வு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.
எனவே, இத்தகையோர் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்கும் வகையில்,நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி இணையதளத்தில் மேலும் ஒரு வாரத்துக்கு வசதி ஏற்படுத்தும். பிரதான வழக்கில் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸியையும் எதிர்மனுதாரராகச் சேர்க்கிறோம். இந்த வழக்கு ஜனவரி மாதத்தில் ஏதாவதொரு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னணி: மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு எழுதுவதற்கு வயது வரம்பை இந்திய மருத்துவக் கவுன்சில் நிர்ணயம் செய்துள்ளது. இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. கடந்த ஜனவரி 22-இல் ஓர் அறிவிக்கை வெளியிட்டது. அதில், நீட் தேர்வு எழுத பொதுப் பிரிவினருக்கு 25, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 30 என அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்த வயது வரம்பு தொடர்பான அறிவிக்கைக்கு தடை விதிக்கக் கோரி கேரளத்தின் பொதுப் பிரிவைச் சேர்ந்த நீட் தேர்வு ஆர்வலர்களான பினு, மோகித்குமார் உள்ளிட்டோர் தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கை கடந்த பிப்ரவரி 28-இல் விசாரித்த தில்லி உயர்நீதிமன்றம், நீட் தேர்வு வயது வரம்பு தொடர்பான சி.பி.எஸ்.இ. அறிவிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்தது. பின்னர், நீட் தேர்வுக்கான வயது வரம்பு சட்டப்படி செல்லும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், வயது வரம்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தது.
தில்லி உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக பினு, மோகித்குமார் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மே 14-இல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். அதில், எம்பிபிஎஸ், அது சார்ந்த படிப்புகளான பிஏஎம்எஸ், பிஎச்எம்எஸ், செவிலியர் ஆகியவற்றுக்கான தேர்வுகளில் தகுதி பெறும் மாணவர்களுக்கு கேரள அரசு இடஒதுக்கீடு அளிக்கிறது. இதில், ஐந்தரை ஆண்டுகள் கொண்ட பிஏஎம்எஸ், பிஎச்எம்எஸ் ஆகிய படிப்புகளை முடித்த மாணவர்கள், நீட் தேர்வு எழுத விரும்பினால், வயது வரம்புக்கு இந்த உத்தரவு ஒரு தடையாக உள்ளது. எனவே, இந்த வயது வரம்பு தொடர்பான விதி, அரசியல் சாசனம் அளித்த அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் ஆகியவற்றுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

திருமண விழாவிற்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

SCROLL FOR NEXT