தமிழ்நாடு

டீசல் மானியத்தை உயர்த்தக் கோரி மீனவர்கள் சாலை மறியல்

தினமணி

மீன்பிடி படகுகளுக்கான டீசல் மானியத்தை உயர்த்துவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகை மாவட்ட மீனவர்கள், நாகையில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பங்கேற்ற 1,500-க்கும் அதிகமானோரை போலீஸார் கைது செய்தனர்.
 மீன்பிடி விசைப் படகுகளுக்கு முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்பட்ட டீசல் வழங்க வேண்டும் அல்லது மீன்பிடி படகுகளுக்கான மானிய டீசலை உயர்த்தி வழங்க வேண்டும்.
 இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதல்களிலிருந்து தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டங்களை டெல்டா மாவட்டங்களில் அனுமதிக்கக் கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் கடந்த 3 -ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் காரணமாக, 1,500-க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் மீன்பிடிப்பில் ஈடுபடுத்தப்படாமல், கரைகளில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், நாகை மாவட்டத்தின் மீன்பிடித் தொழில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
 இந்த நிலையில், வேலை நிறுத்தப் போராட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகை மாவட்ட மீனவர்கள், நாகை புத்தூர் ரவுண்டானா அருகே வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 நாகை மாவட்டத்தின் பல்வேறு மீனவக் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள், மீனவப் பெண்கள் மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் திரளானோர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
 மறியல் போராட்டம் காரணமாக, நாகை - தஞ்சாவூர், நாகை - தூத்துக்குடி மார்க்க சாலைப் போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகத் தடைபட்டது. போராட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தியும், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் மீனவர்கள் முழக்கங்களை எழுப்பினர். மறியலில் பங்கேற்ற சுமார் 300-க்கும் அதிகமான மீனவப் பெண்கள் உள்பட 1,500 }க்கும் அதிகமானவர்களை போலீஸார் கைது செய்து, வெள்ளிக்கிழமை மாலை விடுவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வட்டி வசூல் வேண்டாம்: வங்கிகளுக்கு ஆா்பிஐ அறிவுறுத்தியிருப்பது ஏன்?

சொக்கன் தோற்கும் இடம்..!

‘எலக்சன்’ ராணி!

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

SCROLL FOR NEXT