தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மறைவு

தினமணி

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி (58) சனிக்கிழமை மாரடைப்பால் காலமானார்.
 சென்னை பெசன்ட்நகரில் உள்ள இல்லத்தில் இருந்தபோது பரிதி இளம்வழுதிக்கு சனிக்கிழமை அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
 பரிதி இளம்வழுதி திமுகவின் சார்பில் 6 முறை சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியாற்றியுள்ளார். 25-ஆவது வயதில் முதன் முதலில் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் சத்தியவாணி முத்துவை எதிர்த்துப் போட்டியிட்டு பெரம்பூரில் தொகுதியில் வெற்றிபெற்றார். அதைத் தொடர்ந்து எழும்பூர் தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். எழும்பூர் தொகுதியை அவர் கோட்டையாகவே வைத்திருந்தார். 1991-இல் திமுக சார்பில் சட்டப்பேரவையில் ஒரே ஒரு உறுப்பினராக இடம்பெற்று, சிறப்பாகச் செயல்பட்டார். இவர் பணியைப் பாராட்டி வீர அபிமன்யு என்று கருணாநிதி புகழ்ந்தார்.
 1996-2001-ஆம் காலகட்டத்தில் சட்டப்பேரவைத் துணைத்தலைவராக, 2006-2011-இல் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராகவும் இருந்தார். அதன் பிறகு திமுகவில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக 2013-இல் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.
 முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு டி.டி.வி.தினகரன் ஆதரவாளராகச் செயல்பட்டார். அதைத் தொடர்ந்து, அதிமுகவிலிருந்து அவர் நீக்கப்பட, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்து செயல்பட்டு வந்தார்.
 பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் பரிதி இளம்வழுதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது.
 மு.க.ஸ்டாலின் அஞ்சலி: பரிதிஇளம்வழுதி இறந்த தகவல் கிடைத்ததும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் பரிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரின் இறுதிச் சடங்கு மயிலாப்பூரில் உள்ள கிருஷ்ணாம்பேட்டை மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
 தலைவர்கள் இரங்கல்
 மு.க.ஸ்டாலின்: பரிதி இளம்வழுதியின் மறைவுச் செய்தி கேட்டு துயரமடைந்தேன். திமுகவின் கொள்கைப் பிரசாரங்களிலும், சட்டப்பேரவைப் பணிகளிலும் ஒளிவீசியவர். அவர் மறைவு திராவிட இயக்கத்துக்குப் பேரிழப்பு.
 வைகோ: சட்டப்பேரவை உறுப்பினர்களின் கேள்விக்குப் பதில் கேள்வியை நொடி நேரத்தில் தொடுப்பதும், அமைச்சர்களைத் திணற வைப்பதும், எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தால் ஆளுங்கட்சியைக் கேள்விக் கணைகளால் துளைக்கும் ஆற்றல் மிக்கவர் பரிதி இளம்வழுதி. அவர் மறைவு திராவிட இயக்கத்துக்குப் பெரிய இழப்பு.
 டிடிவி தினகரன்: பரிதிஇளம்வழுதி மறைந்த செய்தி அறிந்து வேதனையடைந்தேன். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் தியாகத்துக்கும் துரோகத்துக்குமான யுத்தத்தில் தியாகத்தின் பக்கம் அழுத்தமாக நின்றவர். அவர் மறைவையொட்டி கட்சியின் சார்பில் மூன்று நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெஸ்லாவில் இரு உயர் அலுவலர்கள் டிஸ்மிஸ்! நூற்றுக்கணக்கானோர் நீக்கம்?

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் முதல்வர் நவீன் பட்நாயக்

மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

அதிக வட்டி வசூல் வேண்டாம்: வங்கிகளுக்கு ஆா்பிஐ அறிவுறுத்தியிருப்பது ஏன்?

சொக்கன் தோற்கும் இடம்..!

SCROLL FOR NEXT