தமிழ்நாடு

கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுப் பணி நிறைவு

தினமணி

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்ற நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, அதற்காகத் தோண்டப்பட்ட குழிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் திங்கள்கிழமை மூடப்பட்டன.
 கீழடி பள்ளிச் சந்தை புதூரில் கடந்த 2014 ஆம் ஆண்டு இந்திய தொல் பொருள் அகழ்வாராய்ச்சி துறையினரால் அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டன. மூன்று ஆண்டுகள் (2014-2017) நடைபெற்ற மூன்று கட்ட அகழாய்வுப் பணிகளில் தமிழக வரலாற்றின் தொடக்க காலத்தைச் சேர்ந்த செங்கல் கட்டடங்கள், பல்வேறு வகையான மணிகள், தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகள், தந்தத்தால் ஆன தாயக் கட்டைகள், இரும்பாலான போர்க் கருவிகள், உறை கிணறுகள், வெளிநாட்டுடன் வணிகத் தொடர்பு கொண்டதற்கான ஆதாரங்கள் உள்ளிட்ட ஏராளமான தொல் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
 இதையடுத்து, தொல்லியல் துறையின் துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி பூமி பூஜையுடன் தொடங்கிய நான்காம் கட்ட அகழாய்வு பணியில் 2 தொல்லியலாளர்கள், 4 அகழ்வாய்வாளர்கள் உள்ளிட்ட ஏராளமான களப் பணியாளர்கள் ஈடுபட்டனர். சுமார் 6 மாதங்கள் நடைபெற்ற இப் பணி கடந்த செப்.30 ஆம் தேதி நிறைவடைந்தது.
 இதில், 34 குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வில் 5,820 தொல்பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதையடுத்து, கடந்த 13 ஆம் தேதி, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், தொல்லியல் துறை ஆணையர் உதயச்சந்திரன் ஆகியோர் அகழாய்வு செய்த இடத்தையும், கிடைக்கப்பெற்ற தொல் பொருள்களையும் நேரில் பார்வையிட்டனர்.
 இந்நிலையில், நான்காம்கட்ட அகழாய்வுப் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அதற்காகத் தோண்டப்பட்ட குழிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் திங்கள்கிழமை மூடப்பட்டன.
 மேலும், அங்கு கிடைத்த தொல் பொருள்கள் முழுவதும் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு, மதுரையில் உள்ள தொல்லியல் துறை அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளதாகவும், இன்னும் ஓரிரு மாதங்களில் மதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகளில் கிடைத்த தொல் பொருள்களை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க உள்ளதாகவும் தொல்லியல் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT