தமிழ்நாடு

தள்ளிப் போகிறது ரஜினியின் அரசியல் பிரவேசம்!

ஜி. அசோக்

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அரசியல் கட்சியைத் தொடங்கி மக்களின் மன ஓட்டத்தை ரஜினி அறிவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலைக் குறி வைத்தே அவரது அரசியல் நிலைப்பாடு வெளிப்படும் என்று தெரிகிறது.

வரும் டிசம்பரில் தனது பிறந்த நாளன்று மாநாட்டை நடத்தி அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என வந்த செய்திகள் உண்மையில்லை என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அரசியலே வேண்டாம் என்று இருந்த ரஜினி, இப்போது தடம் மாறியிருக்கிறார். அண்மையில் ரசிகர்களைச் சந்தித்த அவர், "போர் வந்தால் களத்தில் குதிப்போம்... இங்கே சிஸ்டம் கெட்டுக்கிடக்கு... பச்சைத் தமிழன்'' என்றெல்லாம் பேசியபோது, அவரது அரசியல் பிரவேசத்துக்கான சூழலை உருவாக்க முற்படுவது தெரிகிறது.

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது திரையில் பேசிய அரசியல் வசனங்களை அவர் உயிருடன் இல்லாதபோது தற்போது பேசத் தொடங்கியுள்ளார். கால் நூற்றாண்டு காலமாக விவாதிக்கப்பட்டு வந்த "ரஜினி அரசியலுக்கு வருவாரா?' என்ற பேச்சு, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு மீண்டும் உயிர் பெற்றுள்ளது.

கடந்த காலங்களில் சில அரசியல் கருத்துகளைப் போகிற போக்கில் கூறிவிட்டு, ஒதுங்கிவிடும் ரஜினிகாந்த் இப்போது, அரசியல் புள்ளிகளையும், பத்திரிகையாளர்களையும், நண்பர்களையும் அழைத்து ஆலோசனை நடத்தியிருப்பது அவரது அரசியல் பிரவேசத்தை உறுதி செய்கிறது. "ரஜினியின் அரசியல் பிரவேசம் நிச்சயம் நடக்கும்' என்பதுதான் அவரைச் சந்தித்துவிட்டு வந்த பலரின் கணிப்பாகவும் உள்ளது.

கருணாநிதி, ஜெயலலிதா இல்லை

தமிழகத்தின் சக்திவாய்ந்த தலைவர்களாக வலம் வந்த மு.கருணாநிதியும், ஜெ.ஜெயலலிதாவும் இன்றைக்கு இல்லை. அதிமுக பிளவுபட்டிருப்பதால், பலவீனமாக உள்ளது. இப்படிப்பட்ட வெற்றிடத்தில் கால் பதிப்பதுதான் நல்லது என்று நினைக்கிறார் ரஜினி. இந்நிலையில், அவருக்கு அரசியல் கைகூடுமா? அவரின் கடந்த கால அரசியல் நிகழ்வுகள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தின? ரஜினியின் முதல் அரசியல் அத்தியாயம் எங்கே தொடங்கியது? அதற்கான தொடக்கப் புள்ளி எங்கே விதைக்கப்பட்டது? என்பது உள்ளிட்ட அத்தனை கேள்விகளையும் மக்கள் விவாதிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

கமல் பாதை

தனது சுட்டுரைப் பதிவுகள் மூலம் அரசியல் பதிவுகளை வெளியிட்டு வந்த கமல்ஹாசன், மதுரையில் நடந்த முதல் மாநாட்டில் மக்கள் நீதி மய்யம் என்ற தன்னுடைய கட்சிப் பெயரை அறிவித்துவிட்டார். அத்துடன் அனைவருக்கும் கல்வி, தரமான மருத்துவம், நீர் நிலைகளை உருவாக்கி விவசாயத்தை மேம்படுத்துதல் போன்றவற்றை முன்னிறுத்தி அவர் பேசிவருகிறார். தொழிலதிபர்களைச் சந்திப்பது, மருத்துவர்களுடன் சந்திப்பு, மாணவர்களுடன் சந்திப்பு என அவருடைய பட்டியல் நீள்கிறது. அத்துடன் அவர், தன்னுடைய கட்சியில் சேருமாறு பலருக்கும் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறார். அவருடைய தொடர் நடவடிக்கைகள் அனைத்தும் கட்சியை வலுப்படுத்தும் பணிகளாகவே உள்ளன.

ரஜினி ஆதரவாளர்கள் ஆதங்கம்

கமல்ஹாசனின் தீவிர அரசியல் ஈடுபாட்டைக் காணும் பலர் அவர் வேகமாகச் செயல்படுகிறார். ஆனால், ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்று சொன்னதோடு சரி. அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை என பலரும் ஆதங்கப்பட்டனர்.

இதற்கு விடை கொடுக்கும் வகையில், கடந்த மார்ச் 5-ஆம் தேதி எம்ஜிஆர் சிலையைத் திறந்து வைத்து உரை நிகழ்த்தியதில், தன்னுடைய அரசியல் பேச்சை அரங்கேற்றினார் ரஜினிகாந்த். கல்லூரி மாணவர்கள், அவர்களின் பெற்றோர் மற்றும் ரஜினிகாந்தின் ரசிகர்கள் என 7,000 பேர் கலந்து கொண்ட அந்த விழாவில் அவரது பேச்சு வெகு சாமானியரையும் கவர்ந்தது.

நிர்வாகிகள் நியமனம்

அரசியல் பேச்சை அரங்கேற்றியதுடன் தன்னுடைய ரஜினி மக்கள் மன்றத்தின் மூலம் உறுப்பினர்கள் சேர்ப்பதிலும், கட்சி தொடங்கும்முன் கட்டமைப்பை வலுவாக உருவாக்க வேண்டும் என்பதிலும் ரஜினிகாந்த் உறுதியாக இருக்கிறார். அதில் முதல் கட்டமாக மாவட்ட நிர்வாகிகளை நியமனம் செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதுவரை வேலூர், தூத்துக்குடி, நெல்லை, தேனி, நீலகிரி, திருச்சி, பெரம்பலூர், விழுப்புரம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்கும், அந்த மாவட்டங்களில் இருக்கும் ஒன்றியம், நகரம், பேரூராட்சிகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

70,000 கிளைகள்

அதே போன்று கிளை நிர்வாகி பதவிக்கு தலா ஒரு நபர் நியமனம் செய்யப்படுகிறார். கிளை நிர்வாகிகளுக்கு அந்த ஒன்றிய நிர்வாகி பொறுப்பேற்கின்றார். கிளை நிர்வாகி பதவிக்கு நியமிக்கப்படும் நபர் குறைந்தது 30 உறுப்பினர்களையாவது சேர்க்க வேண்டும். இதன் மூலம் ஒரு ஒன்றியத்தில் சாதாரணமாக 3,000 உறுப்பினர்களை ரஜினி மக்கள் மன்றத்தில் இணையச் செய்து வருகின்றனர்.

மேலும் இவர்கள் மூலம் தங்கள் பகுதியில் உள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் தலைமை உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் 70,000 கிளைகளை உருவாக்க ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளர். இதன் மூலம் ரஜினி மக்கள் மன்றத்தை வலுவாகக் கட்டமைக்க முடியும் என்பது அவரது நிலைப்பாடாக உள்ளது.

தனி வழியில் ரஜினி

இதன் மூலம் ரஜினி மக்கள் மன்றத்தை கட்சியாக மாற்றும்போது வேலைப் பளு குறைவதோடு, அரசியல் கட்சியை அறிவித்ததும் அனைத்துப் பணிகளையும் எளிதாகச் செயல்படுத்த முடியும் என்பதுதான் ரஜினியின் எண்ணம்.

அதனால்தான், கமல்ஹாசன் கட்சியைத் தொடங்கிவிட்டு உறுப்பினர்களை சேர்க்கச் சொல்வது போல் இன்றி, முதலில் உறுப்பினர்களைச் சேர்த்துவிட்டு கட்சியைத் தொடங்குவது என்ற புதிய பாதையை தேர்ந்தெடுத்துப் பயணிக்கிறார் ரஜினி.

15 லட்சம் உறுப்பினர்கள்

இதுவரை ரஜினி மக்கள் மன்ற செயலி மூலம் சுமார் 15 லட்சம் பேர் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தவிர ஒவ்வொரு மாவட்டத்திலும் விண்ணப்பங்கள் மூலமும் ரஜினி மக்கள் மன்றத்திற்கு உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

தனது பிறந்த நாளான வரும் டிசம்பர் 12-ஆம் தேதி மாநாட்டை நடத்தி, தனது அரசியல் பிரவேசத்தை ரஜினி தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகப் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. இது குறித்து ஊடகங்களில் செய்திகளும் வெளியாகி வந்தன.

சினிமாவுக்கு விடை

நவம்பர் இறுதியில் "2.0' ரிலீசாக உள்ளது. அதைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வரும் "பேட்ட' படத்தின் படப்பிடிப்பும் விரைவில் நிறைவடையவுள்ளது. இதையடுத்து அவர் தனது சினிமா வாழ்க்கைக்கு முழுக்குப் போட்டுவிட்டு அரசியல் கணக்கைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது வரை அது குறித்து எந்த முடிவையும் ரஜினிகாந்த் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

நாடாளுமன்றத் தேர்தலோடு, சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெறும் நிலையில், அரசியல் கட்சியைத் தொடங்கலாம் என இருந்தார் ரஜினி. ஆனால், இரு அவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் இல்லை எனப் பேசப்பட்டு வருகிறது. இதனால் அரசியல் கட்சியைத் தொடங்குவதில் ரஜினி தயக்கம் காட்டுகிறார்.

சட்டப்பேரவை தேர்தல் மூலம் அரசியல் கணக்கைத் தொடங்க வேண்டும் எனஅவர் நினைப்பதுதான்இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

எனவே 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னரே அரசியல் கட்சி தொடங்கி, சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்க இருக்கிறார் என்பதுதான் இப்போதைய நிலைமை.

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, தமிழக அரசியல் நிலைமை தெளிவடையும் என்பது மட்டுமல்ல, இப்போதிருக்கும் கட்சிகளில் எவையெல்லாம் களத்தில் இருக்கப் போகின்றன, அவற்றின் பலமென்ன என்பதும் தெளிவாகிவிடும். பத்து பேருடன் ஒருவராகத் தேர்தல் களத்தில் இறங்குவதைவிட, தெளிவான இலக்குடன் தனது அரசியல் பயணத்தைத் தொடங்க நினைக்கிறார் ரஜினிகாந்த் என்று தெரிகிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT