தமிழ்நாடு

மதுரை அருகே கோயிலில் திருடப்பட்ட 4 ஐம்பொன் சிலைகள் மீட்பு

DIN


மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் திருடப்பட்ட 4 ஐம்பொன் சிலைகள் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டன. குற்றவாளிகளை போலீஸார் நெருங்கியதால் சிலைகளை விட்டு விட்டு அவர்கள் தப்பியோடிவிட்டதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.பொன்.மாணிக்க வேல் தெரிவித்தார். 
குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் கருவறை கதவை உடைத்து 4 ஐம்பொன் சிலைகளை முகமூடி அணிந்த நபர்கள் திருடிச் சென்றனர். இதுதொடர்பாக ஊரகக் காவல்துறை சார்பில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் மதுரை மாவட்டம் உத்தப்பநாயக்கனூர் அருகே உள்ள கல்யாணிப்பட்டி அருகே உள்ள தனியார் தோட்டத்தில் சாக்குமூட்டை ஒன்று கிடந்ததை செவ்வாய்க்கிழமை அதிகாலை அவ்வழியாகச் சென்ற விவசாயி கணேசன் பார்த்துள்ளார். அந்த சாக்கு மூட்டையில் 4 சிலைகள் இருந்துள்ளன. இதையடுத்து கணேசன் உடனடியாக அந்த சிலைகளை விளாம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவை குருவித்துறை கோயிலில் திருடப்பட்ட சிலைகள் என்பது தெரிய வந்தது. பின்னர் இவை காடுபட்டி காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் ஒரு சிலையின் தண்டலம் உடைக்கப்பட்டிருந்தது. 
இதற்கிடையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், தென் மண்டல காவல்துறை தலைவர் பி.சண்முக ராஜேஸ்வரன், ஊரகக் காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் ஆகியோர் குருவித்துறை கோயிலுக்கு சென்று சம்பவ இடத்தை செவ்வாய்க்கிழமை பார்வையிட்டனர். பின்னர் மீட்கப்பட்ட சிலைகளையும் பார்வையிட்டனர். 
இதையடுத்து செய்தியாளர்களிடம் ஜ.ஜி.பொன்.மாணிக்கவேல் கூறியது: 
குருவித்துறை கோயிலில் திருடப்பட்ட 4 ஐம்பொன் சிலைகளையும் மீட்க போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். போலீஸார் குற்றவாளிகளை நெருங்கியதால் சிலைகளை போட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர். மேலும் சிலைகளை கண்டெடுத்து போலீஸாருக்கு தகவல் அளித்த கணேசனை பாராட்ட வேண்டும். மேலும் அவருக்கு ரொக்கப்பரிசு வழங்க இந்து அறநிலையத்துறைக்கு பரிந்துரைக்கப்படும். தற்போது மீட்கப்பட்டுள்ள சிலைகளில் பெருமாள் சிலையில் மட்டும் தண்டலங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. சிலையில் எவ்வளவு தங்கம் கலந்துள்ளது என்பதை கண்டறிவதற்காக திருடர்கள் அதை சேதப்படுத்தியிருக்கலாம். மீட்கப்பட்டுள்ள சிலை ஒவ்வொன்றும் ஒரு கோடி ரூபாய் மதிப்பு இருக்கலாம். குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள்.
திருட்டு நடந்த குருவித்துறை கோயிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் பழைய கேமராக்கள் என்பதால் அதில் பதிவான திருடர்கள் முகம் தெளிவானதாக இல்லை. அதே போல மிகப்பழமை வாய்ந்த கோயிலில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சிலைகளை வைக்க பாதுகாப்பான அறைகூட இல்லை. மதிப்பு வாய்ந்த சிலைகளுக்கு சாதாரண பூட்டுப் போட்டு பூட்டுவது துரதிர்ஷ்டவசமானது. எனவே கோயிலில் சிலைகள் பாதுகாப்பு அறை கட்டுவதற்கும் பரிந்துரைக்கப்படும் என்றார்.
தென் மண்டல காவல்துறை தலைவர் கே.பி.சண்முகராஜேஸ்வரன் கூறியது:
சிலைகளை மீட்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் கல்யாணிப்பட்டி அருகே சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து குருவித்துறை கோயில் அர்ச்சகர்களைக் கொண்டு அவை திருட்டு போன சிலைகள் தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு பின்பு சிலைகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு, விரைவில் குருவித்துறை கோயில் சந்நிதியில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்துக் கோயில்களிலும் நவீன கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாப்புக் கருவிகளை நிறுவ வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

திருமண விழாவிற்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

SCROLL FOR NEXT