முகப்பு
தமிழ்நாடு

சரக்கு ஆட்டோ ஓட்டுநர் கொலை: 5 பேர் கைது

பள்ளிபாளையம் அருகே சரக்கு ஆட்டோ ஓட்டுநரைக் கொலை செய்த 5 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

Updated On : 23 அக்டோபர், 2018 at 1:20 AM
பகிர்:


பள்ளிபாளையம் அருகே சரக்கு ஆட்டோ ஓட்டுநரைக் கொலை செய்த 5 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் இளைஞர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை காலை உடலில் காயங்களுடன் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். 
இதுகுறித்து பள்ளிபாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அவர், பள்ளிபாளையம் அருகே பெரும்பாறையைச் சேர்ந்த கந்தசாமி மகன் தர்மராஜ் (27) என்பதும், சரக்கு ஆட்டோ ஓட்டுநரான அவர், பள்ளிபாளையம் அருகே ஈ.காட்டூர் பகுதியைச் சேர்ந்த சிலரால் தாக்கப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் திங்கள்கிழமை காலை ஈ.காட்டூர் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (36), ரமேஷ் (30), சிவசக்திவேல் (34), ரெங்கநாதன் (26), ஈஸ்வரமூர்த்தி (26) ஆகிய 5 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், முத்துக்குமாரின் 16 வயது மகள் நூற்பாலையில் வேலை செய்து வருவதாகவும், அந்த சிறுமியும், தர்மராஜூம் காதலித்து வந்துள்ளனராம்.
இதற்கு சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் தனது நண்பர் ஏழுமலை என்பவருடன் தர்மராஜ் சிறுமியின் வீட்டுக்கு அருகில் நின்றுள்ளார்.
இதைக் கவனித்த முத்துக்குமார், அப் பகுதியைச் சேர்ந்த உறவினர்களான ரமேஷ், சிவசக்திவேல், ரெங்கநாதன், ஈஸ்வரமூர்த்தி ஆகியோருடன் சேர்ந்து தர்மராஜைத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த தர்மராஜ் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, முத்துக்குமார், ரமேஷ், சிவசக்திவேல், ரெங்கநாதன், ஈஸ்வரமூர்த்திஆகிய 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.