ஜெயலலிதா நினைவிட விவகாரம்: விசாரணை ஒத்திவைப்பு
மறைந்த முதல்வா் ஜெயலலிதாவுக்கு மெரீனா கடற்கரையில் நினைவிடம் அமைப்பதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை.
மறைந்த முதல்வா் ஜெயலலிதாவுக்கு மெரீனா கடற்கரையில் நினைவிடம் அமைப்பதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை வரும் செப்டம்பா் 18-ஆம் தேதிக்கு உயா் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சென்னை உயா் நீதிமன்றத்தில் தேசிய மக்கள் கட்சி தலைவா் எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனுவில், மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு மெரீனா கடற்கரையில் உள்ள அவரது சமாதியில் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது.
இதற்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் நினைவிடம் அமைக்கக்கூடாது. நினைவிடம் அமைத்தால் அது தவறான முன் உதாரணமாகிவிடும். எனவே மெரீனாவில் நினைவிடம் கட்ட அனுமதிக்க கூடாது என உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.
Advertisement
இந்த மனு நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் கே.கல்யாணசுந்தரம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் விசாரணையை வரும் செப்டம்பா் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.