தமிழ்நாடு

பாஜகவுக்கு எதிராக கோஷமிட்ட மாணவி கைது: தமிழிசையின் புகாரும், தலைவர்களின் கருத்தும்

DIN

தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் தகராறில் ஈடுபட்டதாக ஒரு மாணவியை புதுக்கோட்டை போலீஸார் கைது செய்தனர்.

மாணவி கைது செய்யப்பட்டிருப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில், ஸ்டாலின் கருத்தை தமிழிசை கடுமையான விமரிசித்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சென்னையிலிருந்து தனியார் விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு நண்பகல் 12 மணிக்கு வந்தார். விமானத்தில் தமிழிசை இருக்கைக்கு அருகில் தூத்துக்குடி கந்தன் காலனியை சேர்ந்த சாமி மகள் லூயிஸ் சோபியா (22) அமர்ந்து பயணித்துள்ளார். ஆராய்ச்சி மாணவியான லூயிஸ் சோபியா கனடாவிலிருந்து சென்னை வந்து அங்கிருந்து தூத்துக்குடிக்கு வந்துள்ளார்.

விமானப் பயணத்தின்போது தமிழிசையை பார்த்ததும் ஆவேசமடைந்து பாஜகவுக்கு எதிராக கோஷமிட்டாராம். தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்த பின்னரும் பாஜக குறித்தும், தமிழிசை குறித்தும் அவதூறாக பேசினாராம். அப்போது தமிழிசை சௌந்தரராஜன் அப்பெண்ணை அழைத்து நாகரிகமாக நடந்து கொள்ளும்படி தெரிவித்தபோது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழிசை சௌந்தரராஜன் விமான நிலைய அதிகாரிகளிடமும், தனியார் விமான நிறுவனத்திடமும் புகார் தெரிவித்துவிட்டு திருநெல்வேலி புறப்பட்டுச் சென்றுவிட்டார். விமான நிலைய போலீஸார் அப்பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் லூயிஸ் சோபியாவிடம் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி அவர் மீது 3 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

தீவிரவாத அமைப்பின் பின்புலமாக இருக்கலாம்: தமிழிசை கூறுகையில், விமானத்துக்குள் சக பயணிகளுக்கு முன்னால் அப்படி கோஷம் போடுவதற்கு அப்பெண்ணுக்கு உரிமை இல்லை. அவர் சாதாரண பயணி மாதிரி தோன்றவில்லை. எனது உயிருக்கு ஆபத்தான ஒரு சூழ்நிலை அங்கு இருந்தது என்றுதான் நினைக்கிறேன். அவர் எழுந்து நின்று கைகளை உயர்த்தி கோஷம் போட்ட விதமானது அவரது பின்புலத்தில் ஏதாவது ஒரு தீவிரவாத அமைப்பு இருக்கிறதோ என சந்தேகிக்கிறேன். தமிழகத்தில் இப்படிப்பட்ட அமைப்புகள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

இந்த நிலையில், சோபியாவின் கைது நடவடிக்கைக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஜனநாயக விரோத - கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது! உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்! அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை இலட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்? நானும் சொல்கின்றேன்! “பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக!” என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு தமிழிசை தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து டிவட்டரில் பதிவு செய்திருப்பது மனவேதனையளிக்கிறது. இதில் பின்புலம் ஏதாவது இருக்கலாம் என்ற அடிப்படையில் தான், நான் அந்த பெண் மீது புகார் அளித்தேன். அந்த பெண் விமானத்துக்குள் நடந்து கொண்ட விதம் தவறானது. 

அவரது செயலுக்கு சக அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவளித்திருப்பது தவறான அரசியல். ஒரு சக அரசியல் தலைவருக்கு பிரச்னை ஏற்படும்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதுபோல் பதிவு வெளியிடுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அவர் சரியான அரசியலை நடத்தவில்லை என்பது இதன்மூலம் தெளிவாகிறது. 

இதனை நான் கண்டிக்கிறேன். திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி இருந்திருந்தால் இதுபோல் நடந்திருக்க மாட்டார் என்றார். 

இந்த நிலையில், அப்பெண் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெறுமாறு தமிழிசைக்கு இயக்குநர் பாரதிராஜா கோரிக்கை வைத்திருக்கும் நிலையில், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கைது நடவடிக்கைக்கு தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

இதற்கிடையே, தூத்துக்குடி நீதிமன்றத்தில் சோபியாவின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

SCROLL FOR NEXT