தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க அரசு பரிசீலிக்கும்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

DIN


மக்கள் நலன் கருதி பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைப்பது குறித்து தமிழக அரசு பரிசீலிக்கும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக, சென்னையில் இருந்து பயணிகள் விமானத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை சேலம் வருகை தந்தார். அவருக்கு மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்பு அளித்தனர்.
இதனையடுத்து, செய்தியாளர்களிடம் முதல்வர் கூறியது: பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும். தமிழக அரசின் நிதி நிலைமை சரியாக இருந்தால்தான் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற முடியும். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் போக்குவரத்துக் கழகங்கள் நாள்தோறும் இழப்பைச் சந்தித்து வருகின்றன. இருப்பினும், மக்கள் நலன் கருதி பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைப்பது குறித்து தமிழக அரசு பரிசீலிக்கும்.
கர்நாடக அரசு அணை கட்ட முயன்றால் சட்டரீதியாகச் சந்திப்போம்: மேக்கேதாட்டுவில் எந்தக் காலத்திலும் அணை கட்டக் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. உச்ச நீதிமன்றமும், தமிழக அரசின் அனுமதியின்றி எந்தக் காலத்திலும் காவிரியில் அணை கட்டக் கூடாது என்று தெளிவாகத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தில் கடும் வறட்சி நிலவும் போது, குடிநீருக்குக் கூட தண்ணீர் தர கர்நாடக அரசு மறுத்துவிட்டது. இந்நிலையில், மேக்கேதாட்டுவில் அணை கட்டப்பட்டால், தமிழகம் கடுமையாகப் பாதிக்கப்படும். மேக்கேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயன்றால், அதை சட்டரீதியாகச் சந்திப்போம்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டாலே நடவடிக்கை எடுத்தது குறித்து கேட்டதற்கு பதிலளித்த முதல்வர், அது போன்று நடந்ததாக தனக்கு தெரியவில்லை. குற்றச்சாட்டுக் கூறுவதாலேயே ஒருவர் குற்றவாளி ஆகிவிட முடியாது. தமிழக அரசு பல்வேறு தடைகளைத் தாண்டி வெற்றிகரமாக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதால், மக்கள் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. பொய் குற்றச்சாட்டுகளைக் கூறி, மக்கள் மத்தியில் சாதிக்க முடியாததால், எதிர்க்கட்சிகள் தற்போது அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றன. அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளை நாங்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்.
நாடாளுமன்றத் தேர்தலைப் பொருத்தவரை கடந்த முறை 37 தொகுதிகளில் வெற்றி பெற்றதைப் போன்றே, தற்போதும் வெற்றிபெற முயற்சி செய்வோம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களின் திட்டங்களை நிறைவேற்ற உதவி செய்பவர்களுக்கு ஆதரவளிப்போம். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான இடங்களைப் பெற்றதால்தான் காவிரி பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் தமிழகத்துக்கு ஆதரவாகத் தீர்வு காணப்பட்டது. வரும் தேர்தலிலும் அதிக இடங்களை அதிமுக கைப்பற்றும்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் வாக்காளர்களுக்கு அதிமுக சார்பில் தற்போதே பணம் வழங்கப்படுவதாக வந்த தகவல் தவறான தகவல், இதுபோன்று நடவடிக்கைகளில் அதிமுக எப்போதும் ஈடுபட்டது இல்லை. தேர்தலில் வாக்களிக்கப் பணம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம் என்றார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியது குறித்து மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை கூறியது அவரது கருத்து என்று கூறிய முதல்வர், தமிழக அரசைப் பொருத்தவரை மத்திய அரசுடன் இணக்கமாக நடந்துகொண்டு, திட்டங்களுக்காக உரிய நிதியைப் பெறுவதையே விரும்புவதாகத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT