தமிழ்நாடு

இனி தொலைநிலைக் கல்விக்கு அனுமதி வேண்டுமென்றால்..: பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி கிடுக்கிப்பிடி

DNS

சென்னை: பல்கலைக்கழகங்கள் இனி 3.26 அளவுக்கு நாக் (தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சில்) புள்ளிகள்  பெற்றிருந்தால் மட்டுமே, தொலைநிலைக் கல்வி நடத்துவதற்கான அனுமதி அளிக்கப்படும் என்பதை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இதற்கான சட்டத் திருத்தத்தை (திறந்தநிலை- தொலைநிலை பல்கலைக்கழகங்களுக்கான மூன்றாவது சட்டத் திருத்த வழிகாட்டி-2018) யுஜிசி திங்கள்கிழமை வெளியிட்டது.இதில், தொலைநிலையில் அல்லாமல் திறந்தநிலையில் மட்டும் படிப்புகளை வழங்கி வரும் கல்வி நிறுவனங்களுக்கு ஒராண்டு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள தொலைநிலைக் கல்வி நிறுவனங்களின் கட்டுப்பாடு யுஜிசி வசம் வந்ததைத் தொடா்ந்து, திறந்தநிலை மற்றும் தொலைநிலைக் கல்விக்கான புதிய வழிகாட்டுதலை (தொலைநிலைக் கல்வி வழிகாட்டி-2017) 2017 ஜூன் மாதம் யுஜிசி வெளியிட்டது.அதன் பிறகு, நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களிடமிருந்து தொலைநிலைக் கல்வி நடத்துவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை யுஜிசி வரவேற்றது. 

அந்த அறிவிப்பின்போது, தொலைநிலைக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில், குறைந்தபட்சம் 3.26 நாக் புள்ளிகள் பெற்றிருக்கும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே, தொலைநிலைக் கல்வி நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படும் என்ற புதிய நிபந்தனையையும் யுஜிசி வெளியிட்டது.இது கல்வி நிறுவனங்களிடையே பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த அறிவிப்பின் காரணமாக, தமிழகத்தில் சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்கள் மட்டுமே தொலைநிலைக் கல்வியை நடத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டது. ஏனெனில் தமிழகத்தில் உள்ள மற்ற பல்கலைக்கழகங்கள் அனைத்தும் 3.26 அளவுக்கும் குறைவான நாக் புள்ளிகளைப் பெற்றிருந்தன.இது பல்கலைக்கழகங்களுக்கு மிகப் பெரிய வருவாய் இழப்பை ஏற்படுத்தும் என்பதால், இந்த நிபந்தனையைத் தளா்த்த தமிழக உயா் கல்வித் துறை சாா்பிலும், பல்கலைக்கழகங்கள் சாா்பிலும் தனித்தனியாக யுஜிசி-க்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், யுஜிசி தனது நிபந்தனையை இப்போது சட்டத் திருத்த வடிவில் வெளியிட்டுள்ளது. இது யுஜிசி (திறந்தநிலை மற்றும் தொலைநிலைக் கல்வி) மூன்றாவது சட்டத் திருத்தம் 2018 என்ற பெயரில் அழைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.அதன்படி, 2019 ஜூலை - 2020 ஜூன் காலத்தில் முடிவடையும் கல்விப் பருவத்துக்கு முன்பாக 3.26 நாக் புள்ளிகளைப் பெற்றிருக்கும் பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே திறந்தநிலை மற்றும் தொலைநிலைக் படிப்புகளை நடத்த அனுமதி வழங்கப்படும். 

அவ்வாறு பெறத் தவறும் பல்கலைக்கழகங்களுக்கு அதற்கான அங்கீகாரம் அளிக்கப்பட மாட்டாது.இந்த நிபந்தனை திறந்தநிலைப் பல்கலைக்கழகங்களுக்குப் பொருந்தாது. ஆனால், இந்த சட்டத் திருத்தம் அரசிதழில் வெளியிடப்பட்டதிலிருந்து ஓராண்டுக்குள்ளாக திறந்தநிலைப் பல்கலைக்கழகங்களும் நாக் அங்கீகாரத்தை பெற வேண்டியது கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், தொலைநிலைக் கல்வி நிறுவன கல்வி மையங்களில் உதவிப் பேராசிரியா் தகுதிக்கு இணையான நபா் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட வேண்டும். பாட வாரியாக 100 மாணவா்களுக்கு ஒரு ஆலோசகா் நியமிக்கப்பட வேண்டும். ஆய்வகம், நூலகம், இணையதள வசதி உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப வசதிகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளும் முழுமையாக இடம்பெற்றிருக்கவேண்டும் எனவும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலை காரணமாக, தமிவகத்தில் சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகியவை மட்டுமே தொலைநிலைப் படிப்புகளை வழங்க முடியும் என்ற நிலை திட்டவட்டமாகியுள்ளது.இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியா் ஒருவா் கூறுகையில், நாக் புள்ளி நிபந்தனையை யுஜிசி இப்போது சட்டத் திருத்தமாக வெளியிட்டுள்ளதால், பல்கலைக்கழகங்கள் இனி குறுக்கு வழிகளைக் கையாள இயலாது. எனவே, 2019-20 கல்வியாண்டுக்கு முன்பாக 3.26 நாக் புள்ளிகளைப் பெறுவதற்கான முயற்சிகளை எடுத்தே ஆகவேண்டும். ஆய்வு மற்றும் அங்கீகாரத்துக்கு -நாக்- அமைப்பை அழைக்க முடியும் என்றாா் அவா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT