தமிழ்நாடு

உப்பூர் அனல் மின்நிலைய திட்டம்: விவசாயிகள், மீனவர்கள் கடும் எதிர்ப்பு 

சி.வ.சு. ஜெகஜோதி


ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் 1,600 மெகாவாட் மின் உற்பத்திக்காக 2 அனல்மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வரும் நிலையில், இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என மீனவர்களும், விவசாயிகளும் போராடி வருகின்றனர். 
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவுக்கு உள்பட்ட உப்பூர், வளமாவூர்,திருப்பாலைக்குடி, நாகனேந்தல் ஆகிய கிராமப்பகுதிகளை உள்ளடக்கி சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் 2 அனல்மின் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தை ரூ.12,665 கோடி மதிப்பில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் மேற்கொண்டு வருகிறது. இவ்விரு மின் நிலையங்கள் மூலம் தலா 800 மெகாவாட் வீதம் தினசரி 1,600 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அனல்மின் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கின. 2019 ஆம் ஆண்டுக்குள் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை 10 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளன. நிர்மாணப்பணிகளை பெல், ரிலையன்ஸ் மற்றும் எல்.அன்.டி நிறுவனங்கள் செய்து வருகின்றன.இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என இப்பகுதி விவசாயிகளும், மீனவர்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 
இதுகுறித்து உப்பூர் அனல் மின் நிலைய திட்ட போராட்ட எதிர்ப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் தீரன்.திருமுருகன் கூறியது: இத்திட்டப் பகுதியில் அமைந்துள்ள 37 கண்மாய்களும் வெள்ள நேரங்களில் வழிந்தோடி கடலில் கலக்கும் வண்ணம் அமைந்துள்ளது. அனல் மின்நிலைய புகை வெளியேறும் போது, கண்மாய்களில் உள்ள தாவரங்கள் மற்றும் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும். நிலத்தடி நீர் ஆதாரங்கள் பாதிக்காமல் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்நிலையில் இத்திட்டம் 30 கிராமங்களை உள்ளடக்கிய 3 ஆயிரம் விவசாய குடும்பங்களை பாதிக்கும் வகையில் அமைக்கப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்ட மக்களின் வாழ்வாதாரமே விவசாயமும், மீன்பிடி தொழிலும் தான்.இந்நிலையில் இவ்விரு தொழில்களையும் அழிக்கும் இத்திட்டத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். இத்திட்டப்பணிகளில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகள் எதுவும் பின்பற்றவே இல்லை என்றார்.
இத்திட்டம் குறித்து மின்வாரிய உயர் அதிகாரி கூறியது: கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் நிபுணர்குழுவை அமைத்து, இப்பகுதி கண்மாய்களின் நீர்வழித்தடத்தை மாற்றி அமைக்குமாறு ஆலோசனை வழங்கி இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக பொதுப்பணித்துறையினரும் நீர்வழித்தடத்தை மாற்றும் முயற்சிகளை செய்து வருகின்றனர். அனல் மின் நிலைய கழிவுநீரை கடலுக்குள் விடுவதால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்புகள் ஏற்படாது. இதுதொடர்பாக 2015 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் வயா் திருட்டு: ஒருவா் கைது

வேன் மீது லாரி மோதல்: 4 போ் காயம்

தெய்வத்தமிழ் பேரவையினா், நாம் தமிழா் கட்சியினா் கைது

உதவி ஆய்வாளா் உடலுக்கு அரசு மரியாதை

உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT