தமிழ்நாடு

தகராறு வழக்கில் நூதன தீர்ப்பு: 6 சிறுவர்கள் அரசு மருத்துவமனையில் ஒரு மாதம் வேலை செய்ய உத்தரவு

DIN


தகராறு வழக்கில் தொடர்புடைய 6 சிறுவர்கள் செங்கம் அரசு மருத்துவமனையில் ஒரு மாதம் பணியாற்ற வேண்டும் என்று நூதன தண்டனை விதித்து திருவண்ணாமலை சிறார் சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் வீரானந்தல் பகுதியைச் சேர்ந்த 18 வயது சிறுவன் தனது நண்பர்களுடன் கடந்த 2015, ஜனவரி 24-ஆம் தேதி பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுக்குள்பட்ட சிறுவர்கள் 6 பேர் அங்கு வந்தனர். இரு தரப்பினருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
காயமடைந்த மூவர் செங்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில், தாக்குதல் நடத்திய 6 பேர் மீது புதுப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
திருவண்ணாமலை சிறார் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு நீதிபதி விக்னேஷ் பிரபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில், தாக்குதல் நடத்திய 6 சிறுவர்களும் செங்கம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் கூறும் பணியை செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் அக்டோபர் 19-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து பிற நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
அதன்பேரில், செங்கம் அரசு தலைமை மருத்துவர் ராமநாதன் அறிவுறுத்தலின்படி, அரசு மருத்துவமனையை சுற்றியுள்ள முள் புதர்களை வெட்டி அகற்றும் பணியில் 6 பேரும் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

SCROLL FOR NEXT