தமிழ்நாடு

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்: உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி கவலை

தினமணி

சமத்துவத்தில் முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்கினாலும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த செய்திகள் வந்து கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி கவலை தெரிவித்துள்ளார்.
 பாலின சமத்துவத்துக்கான உறுதியான நடவடிக்கை மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு குறித்த சர்வதேச அளவிலான 2 நாள் கருத்தரங்கு திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை தொடங்கியது. பல்கலைக்கழகம், ஆக்ஸ்போர்டு மனித உரிமைகள் அமைப்பு இணைந்து நடத்திய கருத்தரங்கில் உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி பேசியது: ஐ.நா.சபையின் 2015ஆம் ஆண்டு மாநாட்டில் வறுமை, பசி ஒழிப்பு, அனைவருக்கும் சுகாதாரம், தரமான கல்வி, பாலின சமத்துவம் உள்ளிட்ட 17 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 2030ஆம் ஆண்டுக்குள் அனைத்து நாடுகளிலும் இதனை அமல்படுத்த வேண்டும் என்ற முனைப்புடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. குறிப்பாக பாலின சமத்துவம், தரமான கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், பசுமையான சுற்றுச்சூழல் ஆகிய 5 முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது. நாடு முழுவதிலும் இயற்கை சுரண்டல்கள் தவிர்க்க முடியாதவையாக உள்ளன.
 குறிப்பாக, தமிழகத்தில் அளவுக்கு அதிகமாக அள்ளப்பட்ட ஆற்று மணல் காரணமாக வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், நீடித்த வளர்ச்சி என்பது கேள்விக்குறியாகிறது. சுற்றுச்சூழல், பசுமைப் பொருளாதாரம் என்ற இலக்கை அடைய பெரிதும் சிரமப்பட வேண்டும். நீடித்த வளர்ச்சிக்கு தடையாக உள்ள இயற்கை சுரண்டல்களைத் தடுப்பதுடன், எந்த நிலையிலும் அதனை அனுமதிக்கக் கூடாது.
 உலக அளவிலும், இந்திய அளவிலும் ஒப்பிடுகையில் தமிழகத்தில் சமத்துவம் என்பது முன்னோடியாக உள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டமே பெண்கள் முன்னேற்றத்துக்கான அனைத்து வகை அடிப்படைக் கூறுகளையும் கொண்டதாக அமைந்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதுடன், அவர்களை பாதுகாக்க வழிவகை செய்யும் சட்டங்கள், குற்றங்களுக்கு தண்டனைகள் அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளன.
 இதுமட்டுமல்லாது, பெண்களை சமுதாயத்தில் முன்னேற்றம் பெறச் செய்வதற்கான அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. சமத்துவத்தில் முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்கினாலும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த செய்திகள் வந்து கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது.
 இருப்பினும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக நான் பதவி வகித்தபோது 12 பெண் நீதிபதிகள் பதவியில் இருந்தது பெருமைக்குரியது. அதேபோல, உச்ச நீதிமன்றத்திலும் ஒரே நேரத்தில் 3 பெண் நீதிபதிகள் பதவியேற்றதும் குறிப்பிடத்தக்கது. சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்தமுள்ள 62 நீதிபதிகளில் 12 பேர் பெண்கள் என்பது ஐந்தில் ஒரு பங்குக்கும் குறைவானதே. போட்டித் தேர்வுகள் எழுதி குற்றவியல் நடுவர்களாக, மாவட்ட நீதிபதிகளாக பெண்கள் அதிகம் பேர் வந்துவிடுகின்றனர்.
 ஆனால், நீதித்துறையின் உயர் பதவிகளுக்கு வருவதில்லை. எனவே, உயர் பதவிகளுக்கு பெண்கள் அதிகளவில் வர வேண்டும். உச்ச நீதிமன்ற நீதிபதி தேர்வானது சில விதிமுறைகளுக்கு உள்பட்டு முன்னுரிமை அடிப்படையிலும், மண்டல பரிந்துரை அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுகிறது. இதில், பெண்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும்.
 ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களுக்கு திருமணம், மகப்பேறு காலம், குழந்தை வளர்ப்பு என பல்வேறு நிலைகளில் உள்ள சிரமங்களை கருத்தில் கொள்ள வேண்டும். பாரம்பரியமாக நிலவி வரும் பெண்ணடிமைத்தனத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும். இதற்கு தனிமனிதன் ஒவ்வொருவரிடமும் இருந்தும் மாற்றம் தொடங்க வேண்டும். அதற்கான விழிப்புணர்வு அவசியமானது. கல்வி, பொருளாதாரத்தில் பெண்கள் முன்னேற்றம் அடைந்தால் மட்டுமே பாலின சமத்துவம் சாத்தியமாகிறது. எனவே, பெண்களை கல்வி, பொருளாதார ரீதியாக முன்னேற்றமடையச் செய்வதற்கான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
 சட்டங்களை இயற்றக்கூடிய சட்டப் பேரவை, நாடாளுமன்றங்களில் பெண்கள் அதிகளவில் உறுப்பினர்களாக இடம்பெற வேண்டும். இந்த நிலை ஏற்பட்டால் மட்டுமே பாலின சமத்துவத்துக்கான நீடித்த வளர்ச்சியும், உறுதியான நடவடிக்கையும் சாத்தியமாகும். பெண்களுக்கு எதிரான குற்றங்களும் முற்றிலும் ஒழிக்கப்படும். நீதி, சட்டத்துறை மட்டுமல்லாது அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு உரிய சுதந்திரம் அளித்து ஆதரவு தெரிவிக்க வேண்டும். இதன் மூலமே சமூக வளர்ச்சி சாத்தியமாகும் என்றார்.
 தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் கமலா சங்கரன், ஆக்ஸ்போர்டு மனித உரிமைகள் அமைப்பின் இயக்குநர் சந்திரா பிரட்மேன் ஆகியோர் கருத்தரங்கின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினர். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டி.எஸ்.சிவஞானம், புதுதில்லி உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.முரளிதர், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.குமரகுரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 2 நாள்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கில் நீதிபதிகள், சட்ட வல்லுநர்கள், சட்ட மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து பேசுகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

SCROLL FOR NEXT