தமிழ்நாடு

தருமபுரி அருகே அரசுப் பள்ளி வளாகத்தில் 18 மரங்கள் வேருடன் அகற்றி வேறு இடத்தில் மறுநடவு!

தினமணி

தருமபுரி அருகே பென்னாகரத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இருந்த 18 மரங்கள், அந்த இடத்தில் விடுதி கட்டப்படவுள்ளதால், அவற்றை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நடவு செய்யும் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
 தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், பின்தங்கிய பகுதிகளுக்காக அமைக்கப்படும் உண்டு உறைவிடப் பள்ளிக்கான புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டது. தற்போது இந்தப் பள்ளி தற்காலிகமாக அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.
 புதிய கட்டடம் கட்டுவதற்காக ரூ. 1.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பூமிபூஜையும் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதிய கட்டடங்கள் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் நன்கு செழித்து வளர்ந்திருந்த 18 புளி மற்றும் வேம்பு மரங்களை வெட்டி அகற்றி வீணாக்கிவிடாமல், வேருடன் அகற்றி வேறிடத்தில் நடவு செய்யத் திட்டமிடப்பட்டது.
 இந்தப் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றன. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு. ராமசாமி இப் பணிகளை நேரில் பார்வையிட்டார். அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் உதவித் திட்ட அலுவலர் சீனிவாசன் தலைமையிலான பள்ளி ஆசிரியர்கள் குழுவினர் இதற்கான பணிகளை மேற்கொண்டனர்.
 தருமபுரி மக்கள் மன்றம் மற்றும் தளிர்கள் அமைப்பினர் இப் பணிகளில் இணைந்து பணியாற்றினர்.
 மரங்கள் பாதுகாப்பாக வேருடன் பிடுங்கி, அதே வளாகத்திலேயே ஏற்கெனவே தயாராக வெட்டி வைக்கப்பட்டிருந்த குழிகளில் நடவு செய்யப்பட்டன. தொடர்ந்து இந்த மரங்களை தண்ணீர் விட்டு வளர்க்கும் பணி அந்தப் பள்ளியைச் சேர்ந்த நாட்டு நலப் பணித் திட்டம், பசுமைப் படை, சுற்றுச்சூழல் மன்றங்களின் பொறுப்பில் வழங்கப்பட்டது.
 மரங்களை வேருடன் பிடுங்கி வேறிடத்தில் மறுநடவு செய்யும் பணி கோவை போன்ற பெருநகரங்களில் அடிக்கடி நடந்தாலும், தருமபுரியில் அதுவும் குறிப்பாக அரசுப் பள்ளி வளாகத்தில், ஒரே நேரத்தில் 18 மரங்கள் இடம் மாற்றி வைத்தது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனுஷ்கோடி செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

புணே படகு விபத்து: 5 சடலங்கள் மீட்பு

ஆட்டு ரத்தம் குடித்த பூசாரி பலி

இஸ்ரேல் இனியும் தாமதிக்கக் கூடாது : பிணைக்கைதிகளின் குடும்பத்தினர் கோரிக்கை!

சர்வாதிகார அரசை அகற்றுவதே குறிக்கோள்: காங்கிரஸ்

SCROLL FOR NEXT