தமிழ்நாடு

மத்தியில் நிலையான ஆட்சி அமைய மீண்டும் மோடி பிரதமராக வேண்டும்: முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி

DIN


மத்தியில் நிலையான, வலிமையான ஆட்சி அமைய மீண்டும் நரேந்திரமோடியே பிரதமராக வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கூறினார்.
திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் வி. இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்குகள் கேட்டு, துவாக்குடி, காந்திமார்க்கெட், உய்யக்கொண்டான் திருமலை, சோமரசம்பேட்டை, ஜீயபுரம், ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது, முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பேசியது: மத்தியில் நிலையான, வலிமையான ஆட்சி அமைந்தால்தான் நாடு பாதுகாப்பாக இருக்கும். அண்டைநாடுகளைச் சேர்ந்த பயங்கரவாதிகள் ஊடுருவும் சூழலில் அவற்றை முறியடித்த நரேந்திரமோடியே மீண்டும் பிரதமராக வேண்டும். தேர்தலுக்கு பிறகு மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் தமிழக விவசாயிகளின் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில்  கோதாவரி-காவிரி இணைப்புத்திட்டம் செயல்படுத்தப்படும். ஏழை மக்களுக்கான திட்டங்களை கொண்டு வருவது அதிமுக. அதனை தடுப்பது திமுக.
அதிமுக தலைமையில் கொள்கையுள்ள கட்சிகள், வாக்கு வங்கி பலமிக்க கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்துள்ளன. கொள்கையில்லாத கட்சிகள் இணைந்து திமுக தலைமையில் சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளன. எனவே, அதிமுக கூட்டணியை கண்டு மிரண்டுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தோல்விபயம் காரணமாக அதிமுகவினர் மீதும், அரசு மீதும் ஆதாரமற்ற புகார்களை கூறி வாக்காளர்களை குழப்பிவருகிறார்.  பூதக் கண்ணாடி வைத்துப் பார்த்தாலும் அதிமுக அரசு மீது எவ்வித ஊழல் குற்றச்சாட்டும் கூற முடியாது. ஆனால், இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி என்ற பெருமையை பெற்றது திமுக மட்டுமே.
அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறுகிறார் ஸ்டாலின். திமுகவினரால்தான் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை நாடே அறியும்.  மத்தியில் 15 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்த திமுக, தமிழகத்துக்கு எந்த வளர்ச்சித் திட்டங்களையும் கொண்டுவரவில்லை. மாறாக தங்களது குடும்ப வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டனர்.
திமுகவின் பொய் வழக்கும், அதன் காரணமாக உச்சநீதிமன்றம் வரையில் அலைக்கழிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதே ஜெயலலிதா மரணத்துக்கு காரணம். இதுதொடர்பாக பேச திமுகவுக்கு அருகதையில்லை. 
உதயநிதி வருகை திமுக-வின் வாரிசு அரசியலை வெளிக்காட்டுகிறது. அதிமுகவில் அடிமட்டத் தொண்டனும் முதல்வராகலாம் என்பதற்கு நானே சாட்சி என்றார் முதல்வர்.
இந்த பிரசாரத்தில், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ். வளர்மதி, திருச்சி மக்களவை உறுப்பினர் ப. குமார், மாநிலங்களவை உறுப்பினர் டி. ரத்தினவேல், முன்னாள் அமைச்சர்கள் ந. நல்லுசாமி, மு. பரஞ்ஜோதி, கு.ப. கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT