ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி. அதிமுக சார்பில் ஒரு முறை எம்எல்ஏவாக இருந்த ஆசைமணியும், திமுக சார்பில் 4 முறை எம்எல்ஏவாக இருந்த ராமலிங்கமும் மோதுகிறார்கள்.
2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் பாரதி மோகன் 2,77,050 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொகுதியை கைப்பற்றியிருந்தார்.
இந்த தொகுதிக்கு உட்பட்ட 6 பேரவைத் தொகுதிகளில் பாபநாசம், பூம்புகார், சீர்காழி மற்றும் மயிலாடுதுறை ஆகியவை அதிமுக வசமும், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய தொகுதிகள் திமுக வசமும் உள்ளன.
தஞ்சாவூரின் அய்யம்பேட்டை முதல் மயிலாடுதுறையின் நீடூர் வரை வன்னியர்களும், தலித்துகளும் தவிர ஏராளமான முஸ்லிம் மக்களும் வாழ்ந்து வருகிறார்கள்.
திமுக, அதிமுக மற்றும் அமமுக கட்சியின் வேட்பாளர்கள் அனைவருமே வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் ரிபயுதீன். முஸ்லிம் மக்களின் வாக்குகளைத் திரட்டவே கமல் இவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.
விவசாயம்தான் இந்த தொகுதியில் முழு பலமும். காவிரி டெல்டா பகுதிகளும் இதில் அடங்கும். காவிரி நதிநீர் பிரச்னை இப்பகுதியில் பதிவாகும் வாக்குகளில் எதிரொலிக்கும் என்று நம்பப்படுகிறது.
அடுத்து ஹைட்ரோ கார்பன் திட்டம். இது மக்களை அதிகம் பாதித்திருக்கும் திட்டம். இந்த திட்டத்தை எதிர்த்து 500 நாட்களுக்கும் மேல் இப்பகுதியில் போராட்டம் நடத்தப்பட்டது.
மூன்றாவது பிரச்னை இந்த தொகுதியில் உள்ள 2 தனியார் சர்க்கரை ஆலைகளும், ஒரு கூட்டுறவு சர்க்கரை ஆலையும் சரிவர இயங்காததும், கரும்பு விவசாயிகளுக்கு உரிய விலையை உடனடியாகக் கொடுக்காததும் முக்கியப் பிரச்னையாக உள்ளது.
இங்கு குத்துவிளக்கு செய்யும் தொழிலை ஏராளமானோர் கையாண்டு வந்த நிலையில், ஜிஎஸ்டி வரி விதிப்பினால் அந்த தொழிலும் நலிவடைந்துள்ளது. நலிவடைந்திருக்கும் விளக்கு செய்யும் தொழிலை ஊக்கப்படுத்தவும், வெகு காலமாக பாதியில் நிறுத்தப்பட்டிருக்கும் மயிலாடுதுறை - தரங்கம்பாடி- காரைக்கால் ரயில் பாதையை உடனடியாக அமைத்து, கோயில் ஸ்தலமான மயிலாடுதுறையை, மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து எளிதாக வந்து செல்ல வழி வகை செய்ய வேண்டும் என்பதும் அந்த தொகுதி மக்களின் வேண்டுகோளாக உள்ளது.
திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் இருவருமே எளிதில் அணுகக் கூடியவர்களாகவும், இந்த தொகுதியைப் பற்றி நன்கு தெரிந்தவர்களாகவும் இருப்பதாக திருவிடைமருதூரில் டீக்கடை நடத்தி வரும் துரை கூறுகிறார்.
எனவே, மயிலாதுறையில் மீண்டும் அதிமுகவின் கை ஓங்குமா? அல்லது திமுகவின் கொடி பறக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.