முகப்பு
தமிழ்நாடு

இவர்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர்: கிருஷ்ணகிரியில் அறிவித்தார் ராகுல்

தமிழகத்தை தமிழர்கள்தான் ஆள வேண்டும் என்றும், நாக்பூரில் இருந்து தமிழகத்தை ஆள விடமாட்டோம் என்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் கூறினார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:38 AM
பகிர்:

கிருஷ்ணகிரி: தமிழகத்தை தமிழர்கள்தான் ஆள வேண்டும் என்றும், நாக்பூரில் இருந்து தமிழகத்தை ஆள விடமாட்டோம் என்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் கூறினார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ராகுல் காந்தி, தமிழர்களுக்கும் எனக்கும் உணர்வுப்பூர்மான உறவு முறை உள்ளது. தமிழகத்தை தமிழர்கள்தான் ஆள வேண்டும். நாக்பூரில் இருந்து தமிழகத்தை ஆள விடமாட்டோம். தமிழகத்தின் அடுத்த முதல்வராகி ஸ்டாலின் ஆட்சி செய்வார் என்று அறிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், கடன் மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையா உள்ளிட்டோர் ஏன் சிறையில் அடைக்கப்படவில்லை. ஏழை விவசாயிகள் மட்டும் வாங்கியக் கடனை திரும்பத் தரவில்லை என்றால் அவர்கள் உடனடியாக சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

வறுமையின் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனப்படும் அதிரடித் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளோம். பஞ்சாயத்துகளில் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவோம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் பக்கம் அரசு நிற்பது உறுதி செய்யப்படும்.

விவசாயிகளுக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் மாநிலம் தமிழகம், தமிழர்களை தமிழர்களால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். வெறுப்பு அரசியலை உருவாக்கி தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜக முயல்கிறது. தமிழர்களின் வரலாற்றைப் படித்துப் பார்த்தால் எந்த காலத்திலும் தமிழர்கள் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதை மோடி புரிந்து கொள்வார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் திருப்பூர் மற்றும் காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் தொழில்கள் பாதிக்கப்பட்டன.

ஏழைகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் பணத்தால், பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றம் கொண்டு வரப்படும். நாட்டில் உள்ள 20 சதவீத ஏழைகளுக்கு வாங்கிக் கணக்கில் எவ்வளவு செலுத்த முடியும் என்பதை ஆய்வு செய்தோம். பொருளாதாரத்துக்கு பாதிப்பில்லாமல் ஏழை மக்களுக்கு எவ்வளவு உதவித் தொகை தர முடியும் என்பதை நிபுணர்களைக் கொண்டு ஆராய்ந்தோம். அதன்படியே 20 சதவீத ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.72,000 உதவித் தொகை வழங்க முடியும் என்பதை அறிந்து அறிவித்துள்ளோம். ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் உதவித் தொகை செலுத்தும் திட்டம் நிறைவேற்றப்படும் என்று ராகுல் பேசினார்.

முழு கட்டுரையைப் படிக்க →