தமிழ்நாடு

4 பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு

DIN

திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் சென்னையில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் திங்கள்கிழமை அறிவிக்கப்படுவார்கள் என்று அவர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் (தனி) ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் மே 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் ராயப்பேட்டையில் உள்ள அக் கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை விருப்ப மனு அளித்தனர்.
திருப்பரங்குன்றம் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்து மறைந்த ஏ.கே.போஸின் மனைவி பாக்கியலெட்சுமியும், அவரது மகன்களும் மனு அளித்தனர். 4 தொகுதிகளிலும் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் போட்டியிட விருப்ப மனு அளித்தனர்.
 நேர்காணல்: வேட்பாளர் நேர்காணல் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் விருப்பு மனு அளித்த ஒவ்வொருவரையும் நேர்காணல் செய்தனர். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக இருவரும் நேர்காணல் செய்தனர். தொகுதியின் வெற்றிவாய்ப்பு குறித்தும் நேர்காணலில் பங்கேற்றோரிடம் கேட்டறிந்தனர்.
ஆலோசனைக் கூட்டம்: இந்த நிலையில்,இடைத்தேர்தல் தொடர்பான அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. 
கூட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தலைமை வகிக்க உள்ளனர். 
தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு அதிமுகவின் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.  
இந்தக் கூட்டத்துக்கு பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது: இடைத் தேர்தல் நடைபெறும் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான  வேட்பாளர்கள் திங்கள்கிழமை மாலை அறிவிக்கப்படுவார்கள்.
10 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு குறித்து தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வோம்.  தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் வேதனையளிக்கிறது. இது கண்டத்துக்குரியது. இதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

SCROLL FOR NEXT