தமிழ்நாடு

வரி பாக்கிக்காக ஜெயலலிதாவின் சொத்துகள் முடக்கம்: உயர்நீதிமன்றத்தில் வருமான வரித் துறை தகவல்

DIN

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகள் மற்றும் கடன் விவரங்கள் குறித்த அறிக்கையை வருமான வரித் துறை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. மேலும், வருமான வரி பாக்கிக்காக அவரது சொத்துகள் முடக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், அதிமுக நிர்வாகியான புகழேந்தி  தாக்கல் செய்த மனுவில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பல கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. ஹைதராபாத் திரட்சை தோட்டம், பங்களா, சென்னை போயஸ் தோட்ட இல்லம், கொடநாடு எஸ்டேட் என ரூ.913 கோடிக்கு அதிகமான சொத்துகள் உள்ளன. இந்த சொத்துக்களை நிர்வகிக்க தனியாக ஒரு நிர்வாகியை உயர்நீதிமன்றமே நியமிக்க வேண்டும் என கோரியிருந்தார். 
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஜெயலலிதாவின் சொத்து மற்றும் கடன் விவரங்களை தாக்கல் செய்ய வருமானவரித் துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் சி.சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித் துறை துணை ஆணையர் ஜி.ஷோபா பதில் மனு தாக்கல் செய்தார்.
அந்த பதில் மனுவில், "மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-17-ஆம் ஆண்டு தாக்கல் செய்துள்ள வருமான வரி கணக்குப்படி அவருக்கு ரூ.16 கோடியே 37 லட்சத்து 40 ஆயிரத்து 727 மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள் உள்ளன. மேலும் கொடநாடு எஸ்டேட், ராயல் வேலி பளோரிடெக் எக்ஸ்போர்ட்ஸ், ஜெயா பப்ளிகேஷன், கிரீன் டீ எஸ்டேட், சசி எண்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்களில் ஜெயலலிதாவுக்கு ரூ.40 கோடி மதிப்பிலான பங்குகள் உள்ளன. ஜெயலலிதா இறந்த பிறகு கடந்த 2017-18 ஆம் ஆண்டில் அவருக்கான வருமான வரிக் கணக்கை யாரும் தாக்கல் செய்யவில்லை. கடந்த 1990-91-ஆம் ஆண்டு முதல் 2011-12- ஆம் ஆண்டு வரை குறிப்பிட்ட சில ஆண்டுகளில் ஜெயலலிதா செலுத்த வேண்டிய செல்வ வரி பாக்கி, வட்டி நிலுவையுடன் சேர்த்து ரூ.10 கோடியே 12 லட்சத்து 407 ஆக உள்ளது.
அதே போன்று, கடந்த 2005-06-ஆம் ஆண்டு முதல் 2011-12-ஆம் ஆண்டு வரை அவர் செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கி  வட்டி நிலுவையுடன் சேர்த்து ரூ.6 கோடியே 62 லட்சத்து 97 ஆயிரத்து 720 ஆக உள்ளது. இவை அனைத்தும் சேர்த்து ரூ.16 கோடியே 74 லட்சத்து 98 ஆயிரத்து 127 வரி பாக்கியாக உள்ளது. இந்த வரி பாக்கித் தொகைக்காக ஜெயலலிதாவுக்குச் சொந்தமான போயஸ் தோட்ட இல்லம், அண்ணாசாலையில் ஜெமினி பாலம் அருகே உள்ள பார்சன் தரைத்தள வளாகம், ஹைதராபாத் எல்லாரெட்டி குடாவில் உள்ள ஸ்ரீநகர் காலனி பங்களா, செயின்ட் மேரீஸ் சாலையில் உள்ள சொத்து ஆகிய 4 சொத்துகளை முடக்கி வைத்துள்ளதாக அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இறுதி விசாரணைக்காக வரும் ஜூன் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT