தமிழ்நாடு

கால்நடைத் தீவனங்கள் விலை உயர்வை சமாளிக்க ஊட்டச்சத்து நிறைந்த அசோலாவை வீட்டிலேயே வளர்க்கலாம்!

DIN

மேலூர்: வறட்சி, தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக கால்நடைத் தீவனங்கள் விலை அதிகரித்துள்ள நிலையில், அதற்கு மாற்றாக,  ஊட்டச் சத்து நிறைந்த கால்நடைத் தீவனமான அசோலாவை சிக்கனமான முறையில் வீட்டிலேயே வளர்க்கலாம் என மதுரை வேளாண். அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

கால்நடைகளுக்கான புண்ணாக்கு, பருத்திவிதை, தவிடு போன்றவை பல்வேறு தொழிற்சாலை தயாரிப்புகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், வறட்சி, தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக அவைகளின் உற்பத்தியும் குறைந்து வருகிறது. இதனால், கால்நடைத் தீவனங்கள் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க நெற்பயிருக்கு தொளியில் இடப்படும் உயிர் உரமான அசோலாவை கால்நடைகளுக்குத் தீவனமாகக் கொடுக்கலாம்.

இயற்கை உரமான அசோலாவில் புரதச்சத்து 25 முதல் 30 சதவீதம், நார்ச்சத்து 14 முதல் 15 சதவீதம், கொழுப்புச்சத்து 3 முதல் 4 சதவீதம், மாவுச்சத்து 45 முதல் 50 சதவீதம் உள்ளது. மேலும் பல தாதுஉப்புக்களும், நுண்ணூட்டச் சத்துக்களும் இதில் அடங்கியுள்ளன. அதிக ஆழமில்லாத நீர்தேங்கிய குட்டைகள், நெல்வயல், நாற்றங்கால் ஆகியவற்றில் வளர்க்கலாம். ஒருசென்ட் இடத்தில் சேறாக்கி 5 செ. மீ. உயரத்துக்கு தண்ணீரைத் தேக்கி வைத்து அதில் ஒருகிலோ அசோலாவை போட்டு வளர்க்கலாம். இரண்டு வாரத்தில் அசோலா அறுவடைக்கு தயாராகிவிடும்.

இதுபோன்ற வாய்ப்பு இல்லாதவர்கள் 10 அடி நீளம், 2 அடி அகலம் 1 அடி ஆழமுள்ள சிமெண்ட் தொட்டியில், 25 கிலோ மண் பரப்பி அதனுடன் மக்கிய சாணத்தை கலந்து ஆழ்குழாய் கிணறு தோண்டிய இடத்தில் கிடைக்கும் பாறை மண் 100 கிராம் ஆகியவற்றை கலந்து 5 செ.மீ உயரத்துக்கு நீர் தேக்கிவைக்க வேண்டும். 

இதில் 5 கிலோ அசோலாவை போட்டு வளர்த்தால் 2 வாரத்தில் 35 முதல் 40 கிலோ அசோலா கிடைக்கும். 10 நாள்களுக்கு ஒருமுறை 10 கிலோ சாணக் கரைசலை தொட்டியில் ஊற்ற வேண்டும். பிளாஸ்டிக் தொட்டி, வாளிகளில்கூட சிறிய அளவில் அசோலா வளர்க்கலாம்.

அசோலா ஓர் உயிர் உரம். காற்றில் இருக்கும் தழைச் சத்தைக் கிரகித்து சேர்க்கும் திறனுடைது. ஒரு ஏக்கர் நிலத்தில் 200 கிலோ இடலாம். ரசாயன உரச்செலவு குறைவதுடன் மகசூல் 20 சதவீதம் அதிகரிக்கும். ஒரு கிலோ அசோலாவுக்கான உற்பத்திச் செலவு 75 காசுகளாகும். அசோலாவை கால்நடைகளுக்கு தீவனமாகக் கொடுக்கும்போது, அடர் தீவனத்துடன் சம விகிதத்தில் கலந்து கொடுக்கவேண்டும். கால்நடைகளுக்கு கொடுத்து பழகிவிட்டால் அசோலாவை தனியாகவே உண்ணும். 75 காசு மதிப்புள்ள ஒரு கிலோ அசோலா ரூ.55 விலையுள்ள ஒரு கிலோ புண்ணாக்குக்கு சமம். அவ்வளவு ஊட்டச்சத்து நிறைந்தது.

கறவை மாடுகளுக்கு தினசரி ஒன்று முதல் ஒன்றரை கிலோ, ஆடுகளுக்கு 300 முதல் 500 கிராம். கோழிகளுக்கு 25 முதல் 30 கிராம், முயலுக்கு 100 கிராம் கொடுக்கலாம். இதனால் பால் உற்பத்தி 20 சதவீதம் அதிகரிக்கும். பாலில் கொழுப்புச் சத்தும் கொழுப்பு அல்லாத திடப்பொருள்களின் அளவும் அதிகரிப்பதால் பால் தரமானதாக இருக்கும். 

அசோலா உள்கொள்ளும் கோழிகளின் எடை அதிகரிக்கும். முட்டைக் கோழிகளின் மஞ்சள்கரு அடர்த்தியான நிறத்தில் இருக்கும். ஒருங்கிணைந்த பண்ணையத்தில் அசோலா தயாரிப்பு சுற்றுச்சூழலை மேம்படுத்துவதுடன் வருவாயைத் தரும். இதுதொடர்பான ஆலோசனைகளுக்கு மதுரை வேளாண். 
அறிவியல் மையத்தை அணுகலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

விவசாயிகளுக்கு கோடை பருவ நெல் நடவு பயிற்சி

எலக்ட்ரிக் கடையில் இளைஞா் தற்கொலை

SCROLL FOR NEXT