தமிழ்நாடு

கார்- மினி லாரி மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

DIN


திருவண்ணாமலை அருகே செவ்வாய்க்கிழமை கார் மீது மினி லாரி மோதியதில், கர்நாடக மாநிலத் தொழிலதிபர் குடும்பத்தினர் 5 பேர் உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம், கோரமங்களா பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீநாத்ரெட்டி (60). கிரானைட் தொழில் செய்து வந்தார். இவர், தனது மனைவி சந்திராம்பாள் (55), மகன் பரத் (30), மகள் ஷாலினி (25), மருமகன் சந்தீப் (32) ஆகியோருடன் காஞ்சிபுரத்தில் அத்திவரதர் சுவாமியை வழிபடுவதற்காக செவ்வாய்க்கிழமை காலை காரில் புறப்பட்டார். 
ஷாலினி கர்ப்பிணியாக இருந்தார். திருவண்ணாமலை - செங்கம் சாலையில் அய்யம்பாளையம் கிராமம் அருகே உள்ள ஒட்டக்குடிசல் பகுதியில் சென்ற போது, திருவண்ணாமலையில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் நோக்கிச் சென்ற மினி லாரி, இவர்களது கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரின் முன் பகுதி லாரியின் அடியில் சிக்கி நொறுங்கியது. காரில் பயணம் செய்த 5 பேரும் பலத்த காயமடைந்தனர். 
இதைப் பார்த்த பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் திரண்டு 5 பேரையும் மீட்க முயன்றனர். ஆனால், அவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருந்ததால், 5 பேரையும் உடனடியாக மீட்க முடியவில்லை. இதனால், அவர்கள் ஒவ்வொருவராக உயிரிழந்தனர். 
தகவலறிந்த திருவண்ணாமலை கோட்டாட்சியர் ஸ்ரீதேவி, வட்டாட்சியர் கே.அமுல், டி.எஸ்.பி. அண்ணாதுரை ஆகியோர் விரைந்து சென்று மீட்புப் பணிகளை விரைவுபடுத்தினர். திருவண்ணாமலை தீயணைப்புத் துறையினர் உதவியுடன் பொக்லைன் இயந்திரங்களைப் பயன்படுத்தி லாரியின் அடியில் சிக்கியிருந்த காரும், 5 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டன. 
பின்னர், ஸ்ரீநாத் ரெட்டி, அவரது மனைவி சந்திராம்பாள் உள்பட 5 பேரின் சடலங்களையும் உடல்கூறு பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.
விபத்தில் மினி லாரி ஓட்டுநரான பர்கூரைச் சேர்ந்த ரஜினி (38) பலத்த காயமடைந்தார். 
அவரை பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்தால் திருவண்ணாமலை - செங்கம் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
இந்த விபத்து குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

SCROLL FOR NEXT