தமிழ்நாடு

தாமிரவருணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டம்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

DIN


தாமிரவருணி -கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத் திட்டப்பணிகளின் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு தாக்கல் செய்த மனுவில், தாமிரவருணி ஆற்றில் இருந்து ஆண்டுதோறும் சராசரியாக 13 டிஎம்சி தண்ணீர் கடலில் கலக்கிறது. இந்த தண்ணீரைத் தேக்கி ராதாபுரம், திசையன்விளை, நாங்குநேரி, சாத்தான்குளம் பகுதிகளுக்கு கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வர தாமிரபரணி கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டத்தை கடந்த 2006-ஆம் ஆண்டு தமிழக அரசு உருவாக்கியது. இந்த திட்டத்தை 4 கட்டமாக நிறைவேற்ற திட்டமிட்டு ரூ.369 கோடியும் ஒதுக்கப்பட்டது. 
இந்த திட்டத்துக்கான முதல் இரண்டு கட்டப்பணிகள் முடிந்துவிட்ட நிலையில் 3 மற்றும் 4-ஆம் கட்ட பணிகளை தமிழக அரசு மேற்கொள்ளாமல் நிறுத்தி விட்டது. இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்தக் கோரி திட்டத்துக்கு உரிய நிதியை ஒதுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தேன். 
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, எனது கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை. எனவே தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார். 
 இந்த வழக்கு, நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் கொண்ட அமர்வில்  புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. 
அப்போது அரசு தரப்பில், தாமிரவருணி, கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத் திட்டத்தை முடிக்க வரும் 2020-ஆம் ஆண்டு டிசம்பர் வரை கால அவகாசம் தேவை எனவும், திட்டப் பணிகள் தொடர்பான அட்டவணையும் தாக்கல் செய்யபட்டது. 
மேலும் சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுத் தலைவர் சம்பந்தபட்ட பகுதிகளை ஆய்வு செய்து, இந்த திட்டத்தில் முன்னேற்றம் உள்ளதாக அறிவித்துள்ளார். 
இதுதொடர்பான விரிவான அறிக்கை அடுத்த விசாரணையின் போது தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், திட்டப் பணிகள் குறித்த விரிவான நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் அக்டோபர் மாதம் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் கைதுக்கு சதிதான் காரணம் என ஒப்புக்கொண்ட அமித் ஷா: அதிஷி

குரங்கு பெடல் டிரெய்லர்

ஆதிதிருவரங்கத்தின் அதிசயங்கள்...

ஓடிடி ரிலீஸ்.......இந்த வார திரைப்படங்கள்!

இளஞ்சிவப்பில் தொலையும் மனம்..!

SCROLL FOR NEXT