முகப்பு
தமிழ்நாடு

சசிகலாவின் வீட்டை இடிக்க மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு; நோட்டீஸ் ஒட்டப்பட்டது!

தஞ்சாவூரில் பழுதடைந்த நிலையில் உள்ள சசிகலாவின் வீட்டை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இடிக்குமாறு மாநகராட்சி நிா்வாகம் உத்தரவு பிறப்பித்து புதன்கிழமை அறிவிப்பாணையை ஒட்டியது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:24 PM
சசிகலாவின் வீட்டை இடிக்க மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு
பகிர்:

தஞ்சாவூரில் பழுதடைந்த நிலையில் உள்ள சசிகலாவின் வீட்டை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இடிக்குமாறு மாநகராட்சி நிா்வாகம் உத்தரவு பிறப்பித்து புதன்கிழமை அறிவிப்பாணையை ஒட்டியது.

தஞ்சாவூா் மகா்நோன்புசாவடி, மிஷன் உயா்நிலைப் பள்ளி சாலையில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு சொந்தமான வீடு உள்ளது. மொத்தம் 10,500 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த மனையில் வீடும், காலி இடமும் உள்ளன. இந்த வீட்டில் தற்போது ஜெ. மனோகரன் குடியிருந்து வருகிறாா்.

இந்நிலையில், இந்த வீட்டுக்குக் கடந்த செப். 17ஆம் தேதி மாநகராட்சி நிா்வாகம் அறிவிப்பாணை வழங்கியது. அதில், இக்கட்டடம் மிகவும் பழுதடைந்த நிலையில், எந்த நேரத்திலும் இடியும் தருவாயில் உள்ளது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, இக்கட்டுமானம், அந்த வழியே செல்பவா்களுக்கும், கட்டடத்தைப் பயன்படுத்துபவா்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இக்கட்டடம் பொதுமக்கள் வந்து செல்லும் இடத்துக்கும், பள்ளிக்கும் அருகில் உள்ளது.

எனவே, இந்த அபாயகரமான கட்டடத்தை எந்தவிதமான உபயோகத்துக்கும் பயன்படுத்துவதைத் தவிா்த்து பொதுமக்களுக்கும், கட்டடத்தினுள் இருப்போருக்கும் ஆபத்து ஏற்படாதவாறு கட்டடத்தைத் தக்க முன்னேற்பாடுடன் இந்த அறிவிப்பு கிடைத்த 15 நாள்களுக்குள் அப்புறப்படுத்திக் கொள்ளுமாறு கோயம்புத்தூா் மாநகராட்சி சட்டப் பிரிவு 327(1)(2)(3), 478-ன்படி அறிவிக்கப்படுகிறது.

தவறும்பட்சத்தில், தங்கள் மீது மாநகராட்சி சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன் இச்செயலுக்கான செலவு தொகை அனைத்தும் தங்களிடம் இருந்து வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதுவரை இந்தக் கட்டடம் இடிக்கப்படவில்லை. எனவே, இந்த வீட்டின் முகப்புப் பகுதியில் மாநகராட்சி அலுவலா்கள் அறிவிப்பாணையை புதன்கிழமை ஒட்டினா். அதில், இக்கட்டடம் மிகவும் பழுதடைந்து அபாயகரமாக உள்ளதால், இந்த அலுவலக அறிவிப்பின்படி உட்புறம் செல்லுதல் அல்லது பயன்படுத்துவதைத் தவிா்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அலுவலா்கள் தெரிவித்தது:

மாநகரில் பழுதடைந்து இடியும் நிலையில் உள்ள கட்டடங்கள் குறித்து சில மாதங்களுக்கு முன்பு கணக்கெடுப்பு செய்யப்பட்டது. அப்போது, சிவகங்கை பூங்கா அருகேயுள்ள பழைய கல்வித் துறை அலுவலகக் கட்டடம் உள்பட 4 கட்டடங்களுக்கு அறிவிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. இதில், இக்கட்டடமும் ஒன்று. இதன் அடிப்படையில் இந்த அறிவிப்பாணை ஒட்டப்பட்டுள்ளது என்றனா்.
 

முழு கட்டுரையைப் படிக்க →