முகப்பு
தமிழ்நாடு

தொடர் விடுமுறை: குமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தொடர் விடுமுறை காரணமாக குமரி மாவட்ட சுற்றுலாத் தலங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:43 PM
பகிர்:

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தொடர் விடுமுறை காரணமாக குமரி மாவட்ட சுற்றுலாத் தலங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

தொடர் விடுமுறை காரணமாக குமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களான கன்னியாகுமரி, சொத்தவிளை, வட்டக்கோட்டை, பத்மநாபபுரம் அரண்மனை, முட்டம், மாத்தூர் தொட்டிப் பாலம், திற்பரப்பு அருவி என முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

வடஇந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் கேரள சுற்றுலாப் பயணிகளுடன் ஏராளமான உள்ளூர் சுற்றுலாப் பயணிகளும் திரளாக வருவதால் கூட்டம் அலைமோதுகிறது. 

கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், பேரூராட்சிப் பூங்கா, சன்னதி தெரு, சூரிய அஸ்தமனப் பூங்கா ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

மேலும் கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்குச் செல்ல நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருந்தனர். சுற்றுலாப் பயணிகள் வரவால் இங்குள்ள தங்கும் விடுதிகளில் அறைகள் நிரம்பியுள்ளன.

மேலும், சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டலபூஜை தரிசனத்துக்காக வந்த பக்தர்களில் பெரும்பாலானோர் கன்னியாகுமரிக்கு வந்து செல்வதால் கடுமையான வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஜனவரி 20ஆம் தேதி வரை சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்துக் காணப்படும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

பேரூராட்சி நிர்வாகம்: சுற்றுலாப் பயணிகள் நலன்கருதி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் வசதி, தற்காலிக கழிப்பறை, மின்விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், பயணிகள் பாதுகாப்புக்காக நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.