தமிழ்நாடு

இந்து முறைப்படி திருமணம் செய்வோர் திமுக உறுப்பினராக இருக்கக் கூடாது என அறிவிக்கத் தயாரா?: சரத் சவால்  

DIN

சென்னை: இந்து முறைப்படி திருமணம் செய்பவர்கள் திமுக உறுப்பினராக இருக்கக்கூடாது என்று அறிவிக்கத் தயாரா? என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் சவால் விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சமீபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில், இந்து மதத்தினர் பெரும்பாலும் பின்பற்றும் முறையிலான திருமணம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அநாகரிக முறையில் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

ஓர் அரசியல் இயக்கத்தின் தலைவராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும், வருங்கால முதலமைச்சர் கனவிலும் இருக்கும் ஸ்டாலின், மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாகப் பேசியிருப்பது அவரது முதிர்ச்சியின்மையையும், அவரிடம் தலைமைப் பண்பு இல்லாததையும் நன்றாகவே வெளிப்படுத்திவிட்டது.

நாத்திகவாதமும், மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாகவும் பேசி மட்டுமே அரசியலில் தனது இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருப்பது பரிதாபகரமானது.

இந்து மதத்தினர்கள் மட்டுமல்லாது, உண்மையான நாட்டுப்பற்றும், மத நல்லிணக்கத்தை விரும்புபவர்களும் எந்த மதத்தினராய் இருந்தாலும், இதுபோல் ஒரு மதநம்பிக்கையைப் புண்படுத்தும் அநாகரிகத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இந்து முறைப்படி திருமணம் செய்பவர்கள் திமுக உறுப்பினராக இருக்கக்கூடாது என்றோ, அவர்கள் திமுக சார்பில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாகவோ, அமைச்சர்களாகவோ ஆக முடியாது என்றோ ஸ்டாலின் அறிவிக்கத் தயாரா?

மேலும், மந்திரம் உச்சரித்து திருமணம் செய்யும் மரபைப் பின்பற்றுபவர்கள் திமுகவிற்கு இனிமேல் வாக்களிக்கவேண்டாம் என்று கூறுவதற்கும் திமுக தலைவர் தயாரா என்ற கேள்வியையும் முன் வைக்கிறேன்.

நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என பஞ்ச பூதங்களையும், இயற்கையையும் தொன்றுதொட்டு வணங்கி வரும் இந்து மக்கள் அக்னி சாட்சியாக திருமண பந்தத்தில் இணைபவர்கள். தரையில் அமர்ந்து ஹோமம் வளர்த்து மந்திர உச்சரிப்புக்கு இடையே திருமணம் செய்யும் முறை அனைத்தையும் புனிதமாகக் கருதும் கோடிக்கணக்கான மக்களின் மரபைக் கேலி செய்பவர் மதச்சார்பற்றவர் என்று எண்ண என் மனம் மறுக்கிறது.

இனிமேலாவது நல்ல தலைமைப் பண்போடு மத உணர்வுகளைப் புண்படுத்தாத வகையில் பேசுவதை ஸ்டாலின் கடைப்பிடிக்கவேண்டும் என்று அறிவுறுத்த விரும்புகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT