தமிழ்நாடு

2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கும் 50 சதவீத நிதியை மத்திய அரசு வழங்கவேண்டும்: பிரதமரிடம் முதல்வர் நேரில் கடிதம்

தினமணி

முதல்கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு வழங்கியதுபோல, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கும் மத்திய அரசு 50 சதவீத நிதிப் பங்களிப்பை வழங்கவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் வலியுறுத்தி, கோரிக்கை கடிதத்தையும் வழங்கினார்.
 அரசின் பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும், பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காகவும் திருப்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த பிரதமரிடம், இந்தக் கடிதத்தை முதல்வர் வழங்கினார். அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
 தமிழக அரசு 50 சதவீத நிதி, மத்திய அரசு 50 சதவீத நிதிப் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வந்த முதல்கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் இப்போது முழுமையாக நிறைவடைந்துள்ளன. இந்தத் திட்டத்தின் இறுதிக் கட்டப் பகுதியான டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து வண்ணாரப்பேட்டை வரையிலான 10 கி. மீ. தொலைவு சுரங்க வழி மெட்ரோ ரயில் போக்குவரத்தும் இப்போது தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது.
 இதனைத் தொடர்ந்து 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கான இரண்டம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளைத் தொடங்க உரிய முயற்சிகள் தமிழக அரசால் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த இரண்டாம் கட்டத் திட்டப் பணிகளுக்கு மத்திய அரசிடம் ஒப்புதல் பெறுவதற்காக 2017 ஏப்ரல் மாதமே பரிந்துரைக்கப்பட்டது. இந்த நிலையில், மத்திய அரசால் புதிய மெட்ரோ ரயில் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டது. அந்த புதிய கொள்கையின் அடிப்படையில், தமிழக அரசு சார்பில் விரிவான திட்ட அறிக்கை மீண்டும் தயாரிக்கப்பட்டு மாநில அரசு 50 சதவீதம், மத்திய அரசு 50 சதவீத நிதிப் பங்களிப்புடன் திட்டத்தை மேற்கொள்ள ஒப்புதல் அளிக்க, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
 இந்தத் திட்டத்துக்கான மொத்தச் செலவு ரூ. 69,180 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் நிலத்துக்கான தொகை மற்றும் மாநில வரிகளுக்கான செலவும் சேர்த்து வரும் ரூ. 13,723 கோடி செலவு மாநில அரசு சார்பில் ஏற்றுக்கொள்ளப்படும்.
 மீதி திட்டத் தொகையான ரூ. 55,457 கோடியில் மத்திய அரசு 20 சதவீதமும், மாநில அரசு சார்பில் 20 சதவீதமும் வழங்கப்பட வேண்டியிருக்கிறது. மீதமுள்ள 60 சதவீதத்தை இந்தத் திட்டத்துக்கு கடன் தரும் நிறுவனமான ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை ஏற்றுக் கொள்ளும். இந்த நிதி நிறுவனம் ஏற்கெனவே அதன் பங்களிப்பான ரூ. 20,196 கோடி கடனுக்கு ஒப்புதலையும் அளித்துவிட்டது. முதல் கடன் பத்திரத்துக்கான ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டு விட்டது.
 எனவே, முதல்கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தைப்போல, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தையும் மாநில அரசு 50 சதவீதம், மத்திய அரசு 50 சதவீத நிதி பங்களிப்பு என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்பட ஒப்புதல் அளிக்குமாறு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சகத்தை பிரதமர் அறிவுறுத்த வேண்டும் என பிரதமரிடம் அளித்த கடிதத்தில் முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT