தமிழ்நாடு

உறைபனி, கடும் வறட்சி எதிரொலி: முதுமலை புலிகள் காப்பகத்தில் செயற்கைக் குட்டைகள் அமைப்பு

DIN


முதுமலை புலிகள் காப்பகப் பகுதிகளில் நிலவும் கடும் வறட்சி காரணமாக 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிகத் தண்ணீர்த் தொட்டிகள் அமைத்தும், நீர்க்குட்டைகள் உருவாக்கியும் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.
முதுமலை புலிகள் காப்பகப் பகுதி சுமார் 350 ச.கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. இக்காப்பகத்தில் வழக்கத்திற்கு மாறாக, கோடைக்காலம்  தொடங்குவதற்கு முன்னதாகவே தற்போது கடும் வறட்சி ஏற்படத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக வன விலங்குகளின் உணவுக்கும்,  தண்ணீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. முதுமலை புலிகள் காப்பப் பகுதியிலிருந்து மாயாறு வழியாக தெங்குமரஹாடா, பவானி பகுதிகளுக்கு யானைகள் இடம் பெயரத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், யானைகள், சிறு விலங்குகள் பயன்படும் வகையிலும், இடம்பெயர்வதைத் தடுக்கும் வகையிலும் முதுமலை, சீகூர், சிங்காரா வனசரகப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பகுதிகளில் செயற்கைக் குட்டைகள் அமைத்தும், தண்ணீர்த் தொட்டிகள்  அமைத்தும், ஏற்கெனவே உள்ள தடுப்பணைகளிலும்  நீர் நிரப்பும் பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
முதுமலை புலிகள் காப்பகப் பகுதியில் பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் இந்த அளவுக்கு வறட்சி இதுவரை ஏற்பட்டதில்லை. நடப்பு ஆண்டில் டிசம்பர் மாதத்தில் இருந்தே நிலவிய கடும் உறைபனியும், வடகிழக்குப் பருவமழை தேவையான அளவுக்கு பெய்யாததும் வறட்சிக்கு முக்கியக் காரணங்களாக் கூறப்படுகின்றன. அதிகமான உறைபனி பொழிவு காரணமாக புற்கள் காய்ந்து கருகி, மரங்களில்  இலைகள் உதிர்ந்துவிட்டன. இப்பகுதிகளில் பசுமைப் பரப்பு வெகுவாகக் குறைவிட்டது. அனைத்து விலங்குகளுக்கும் உணவு, தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சீகூர் வனச் சரகர் செல்வம் தினமணி செய்தியாளரிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதிக்குள்ளும், இதன் வெளிப்புறப் பகுதிகளிலும் தற்போது தண்ணீருக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் யானைகள் முதுமலையிலிருந்து மாயாறு வழியாக பவானி பகுதிக்கு இடம் பெயர்ந்து செல்கின்றன. மான், காட்டெருமை போன்றவை இடம்பெயர்வதில்லை. புற்கள் காய்ந்து வைக்கோல்போல மாறிவிட்டதால் சிறு விலங்குகளுக்கு ஏற்றதாக அமைந்துள்ளது. ஆனால், இவற்றை யானைகள் உண்ணாது என்பதால்  அவை இடம்பெயர்ந்து செல்கின்றன.
இதைத் தவிர்ப்பதற்காக சீகூர் வனசரகத்தில் சுமார் 35 இடங்களில் தற்காலிகமாக சிறு குட்டைகள் அமைத்தும், தண்ணீர்த் தொட்டிகள் அமைத்தும், ஏற்கெனவே உள்ள தடுப்பணைகளிலும் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தொட்டியிலும் 1,000 லிட்டர் முதல் 5,000 லிட்டர் வரை தண்ணீர் நிரப்பப்படுகிறது. இப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் மூலம் தொட்டிகளில் தண்ணீர் குறைவதைக் கண்டறிந்து உடனடியாக நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோடைக்காலம் முடியும் வரையிலோ,  திடீரென மழை பெய்து இப்பகுதிகளில் பசுமை திரும்பும் வரையிலோ தண்ணீர் நிரப்பும் பணி மேற்கொள்ளப்படும் என்றார். நீலகிரி மாவட்டத்தைப் பொருத்தமட்டிலும் தென்மேற்குப் பருவமழை குறிப்பிடத்தக்க அளவில் பெய்திருந்தாலும், வடகிழக்குப் பருவமழை  எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கும் குறைவாகவே பெய்துள்ளது. இதனால், நகரப் பகுதிகளிலும் குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 
முதுமலை புலிகள் காப்பகப் பகுதிகள், அருகிலுள்ள வனப்பகுதிகளில் தற்போதே வறட்சியின் தாக்கம் தொடங்கியிருப்பது அனைத்துத் தரப்பினரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இப்பகுதிகளில் திடீரென வனத் தீ ஏற்பட்டால்  அதைக் கட்டுப்படுத்துவது சிரமமாக இருக்கும் என்ற அச்சமும் நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT