திண்டுக்கல்: மாவட்ட மைய நூலகங்களில் செயலி மூலம் பருவ இதழ்களை வாசிக்கும் வசதி பயனளிக்காத நிலையில், போட்டித் தேர்வுகளுக்கான இதழ்கள் கூடுதலாகக் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளைஞர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்திலுள்ள 32 மாவட்ட மைய நூலகங்களையும், திறன்மிகு நூலகங்களாக மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி மூலம் பருவ இதழ்களை வாசிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக, ஒவ்வொரு மாவட்ட மைய நூலகமும் ஆண்டுச் சந்தாவாக தலா ரூ.50ஆயிரம் செலுத்தி, மேக்ஸ்டர் என்ற செயலியை பயன்படுத்தும் உரிமத்தைப் பெற்றுள்ளன.
அந்தந்த மாவட்ட மைய நூலக வளாகத்துக்குள் சென்று, 98118 69259 என்ற எண்ணிற்கு அழைத்தால், இணைப்பு துண்டிக்கப்பட்டு தொடர்பு கொள்ளும் எண்ணுக்கு குறுஞ்செய்தி வருகிறது. அந்த குறுஞ் செய்தியைப் பயன்படுத்தி மேக்ஸ்டர் செயலியை பதிவிறக்கம் செய்தால், தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்தும் வெளியாகும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பருவ இதழ்களை வாசிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழகம் முழுவதுமுள்ள 32 மாவட்ட மைய நூலகங்களிலும் மேக்ஸ்டர் செயலி கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. ஆனால், பெரும்பாலான மாவட்டங்களில், இந்த செயலியை பயன்படுத்தி பருவ இதழ்களை வாசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்மார்ட் செல்லிடப்பேசிகளில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்தவுடன், குறிப்பிட்ட மொழியைத் தேர்வு செய்தால் அதிலுள்ள பருவ இதழ்களின் முதல் பக்கம் காட்சிப்படுத்தப்படுகிறது. அந்த குறிப்பிட்ட புத்தகத்தின் மீது அழுத்தினால், முதல் 6 பக்கங்களை மட்டுமே செல்லிடப்பேசியில் பார்க்க முடிகிறது. அடுத்தடுத்த பக்கங்களை பார்க்க விரும்பினால், ரூ.67, ரூ.72, ரூ.77 என வெவ்வேறு புத்தகங்களுக்கான சந்தா தொகையை செலுத்த வேண்டும் என்ற தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதனை பார்க்கும் வாசகர்கள் அதிருப்தி அடைகின்றனர்.
குறிப்பாக போட்டித் தேர்வுக்கு தயார் செய்யும் இளைஞர்கள், ஆங்கிலம் மற்றும் தமிழில் வெளியாகும் பொது அறிவுத் தொடர்பான பருவ இதழ்களை தங்கள் செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்ய முயற்சிக்கின்றனர். ஆனால், மைய நூலக வளாகத்திற்குள்ளாகவே முழு இதழையும் பார்க்க முடியாமல், வழக்கம்போல் நூலகத்துக்கு வரும் பருவ இதழ்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட மைய நூலக வாசகர் ஆ.சரவணன்(27) கூறியது: கடந்த 2017-இல் மின்னணு பருவ இதழ்கள் (இ-மேகசின்) வாசிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. காகித பயன்பாட்டை தவிர்த்து, நவீன தொழில்நுட்ப வசதிகளை பின்பற்றும் வகையில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், புத்தகப் பக்கங்களை புரட்டி வாசித்து பழகிய வாசகர்களுக்கு, மின்னணு முறையில் வாசிப்பது திருப்தி அளிக்கவில்லை.
இந்நிலையில் திறன்மிகு நூலங்களாக மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் தற்போது மீண்டும் செல்லிடப்பேசியில் பருவ இதழ்களை வாசிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்றைய சூழலில், போட்டித் தேர்வுக்கு தயார் செய்யும் இளைஞர்கள் மட்டுமே ஆங்கிலப் பருவ இதழ்களை தேடுகின்றனர். நாளிதழ் வாசிக்கும் பழக்கமே குறைந்து வரும் நிலையில், பருவ இதழ்களை செல்லிடப்பேசியின் குறுகிய திரையில் வாசிப்பது கடினம். இதனிடையே ஒவ்வொரு பருவ இதழிலும் முதல் 6 பக்கங்களை மட்டுமே பார்க்க முடியும் என்பது வாசகர்களுக்கு அசாதாரணமாக உள்ளது. இத்திட்டத்துக்காக குறிப்பிட்ட தனியார் நிறுவனத்துக்கு ரூ.16 லட்சம் வழங்குவதை தவிர்த்து, போட்டித் தேர்வுக்கான இதழ்களை கூடுதலாக வாங்குவதற்கு நூலகத் துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இதுகுறித்து நூலக அலுவலர் ஒருவர் கூறியது: செல்லிடப்பேசியில் பருவ இதழ்களை வாசிக்கும் வசதி கடந்த 2 மாதங்களாக நடைமுறையில் இருந்து வருகிறது.
மைய நூலக வளாகத்துக்குள் மேக்ஸ்டர் செயலியைப் பயன்படுத்தி அதன் மூலம் பதிவிறக்கம் செய்த பருவ இதழ்களை, வெளியிடங்களுக்குச் சென்று வாசிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது அனைத்து பருவ இதழ்களிலும் முதல் 6 பக்கங்களை மட்டுமே பார்வையிட முடிகிறது.
மேலும், செல்லிடப்பேசியில் பருவ இதழ்களை வாசிப்பதற்கு போட்டித் தேர்வுக்கு தயார் செய்யும் இளைஞர்கள் கூட முன் வருவதில்லை.
வாசகர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள் குறித்து நூலகத்துறை உயர் அலுவலர்களுக்கு தெரிவித்து வருகிறோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.