தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு குறைவு: சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல்
தென்னிந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு குறைவாக இருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்னிந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு குறைவாக இருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேசிய அளவில் ஒப்பிடும்போதும் அந்த வகை காய்ச்சலைக் கட்டுப்படுத்தியதில் தமிழகம்தான் சிறப்பாக இயங்குவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
நிகழாண்டு தரவுகளின்படி, ராஜஸ்தானில்தான் அதிகபட்சமாக பன்றிக் காய்ச்சலுக்கு 127 பேர் பலியாகியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக குஜராத்தில் 71 பேர் அக்காய்ச்சலின் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தைப் பொருத்தவரை 164 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில், அவர்களில் கோவையைச் சேர்ந்த ஒரு பெண் மட்டுமே இறந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரளம், தெலங்கானா, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசத்தை எடுத்துக் கொண்டால், அங்கு தமிழகத்தைக் காட்டிலும் பலி எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பன்றிக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுத்ததன் காரணமாகவே உயிரிழப்புகள் கட்டுப்படுத்தப்பட்டதாக மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இங்கு பாதிப்பு குறைவு. மாநில சுகாதாரத் துறையின் நடவடிக்கையின் காரணமாக பன்றிக் காய்ச்சல் பரவாமல் இங்கு தடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் வருபவர்களைத் தனியாகப் பிரித்து சிகிச்சையளிக்கவும், அவர்கள் அமரும் இருக்கைகளைத் துப்புரவுடன் பராமரிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, புறநோயாளிகளின் கைகளை கிருமி நாசினிகள் மூலமாக சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று அவர்கள் தெரிவித்தனர்.