வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம்களில் 7.31 லட்சம் பேர் விண்ணப்பம்: தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கலுக்காக தமிழகம் முழுவதும் இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் மூலம் 7.31 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கலுக்காக தமிழகம் முழுவதும் இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் மூலம் 7.31 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் திங்கள்கிழமை அளித்த பேட்டி:
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, தமிழகத்தில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாநிலம் முழுவதும் உள்ள 67 ஆயிரத்து 600க்கும் அதிகமான வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
இந்த முகாம்களின் மூலமாக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும், பொதுமக்கள் விண்ணப்பங்களை அளித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை விண்ணப்பித்தோர் அதிகம்: இரண்டு நாள் நடத்தப்பட்ட சிறப்பு முகாமில், விடுமுறை நாளானஞாயிற்றுக்கிழமை வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்கவும், நீக்கவும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இதில், அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமையன்று 13,550 மனுக்களும், ஞாயிறன்று 40, 362 மனுக்களும் என 53 ஆயிரத்து 912 மனுக்கள் பெறப்பட்டன.
இதைப் போல, சென்னை மாவட்டத்தில், 53, 555 விண்ணப்பங்களும், கோவை மாவட்டத்தில் 41, 633 விண்ணப்பங்களும், சேலம் மாவட்டத்தில் 40 ஆயிரத்து 562 மனுக்களும் அளிக்கப்பட்டுள்ளன. இதர மாவட்டங்களில் 40 ஆயிரத்துக்கும் குறைவான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
பெயர் சேர்க்க 80 % பேர்: சிறப்பு முகாம்களில் மொத்தம் 7 லட்சத்து 31 ஆயிரத்து 333 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அதில், 5 லட்சத்து 7 ஆயிரத்து 941 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்.
இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் 15 நாட்களுக்குள் பரிசீலித்து, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கலுக்காக விண்ணப்பங்களை அளிப்பதற்கான சிறப்பு முகாம்கள் நிறைவு பெற்றிருந்தாலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனுத் தாக்கலுக்கு 10 நாள்களுக்கு முன்னதாக, விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் அளிக்கலாம். பரிசீலனை செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும், துணை வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு, தேர்தலுக்கு முன்பு வெளியிடப்படும். மேலும், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின் வழியாகவும் வேட்பாளர் பட்டியலில் பெயரைச்சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்றார்.
மார்ச் 4-இல் தேர்தல் தேதி அறிவிப்பா?
கடந்த 2014- ஆண்டைப் போல, எதிர்வரும் மக்களவைத் தேர்தல் தேதிக்கான அறிவிப்பும் மார்ச் 4 அல்லது 5-ஆம் தேதியன்று வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா விரைவில் தமிழகத்துக்கு வரவுள்ளதாகவும் தெரிவித்தார்.