தமிழ்நாடு

ரூ.105 கோடியில் புதிய கூட்டு குடிநீர் திட்டங்கள்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

DIN


தமிழகத்தில் ரூ.105 கோடி மதிப்பிலான புதிய கூட்டு குடிநீர் திட்டங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி  தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடந்த நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலமாக  திறந்து வைத்தார். இதுகுறித்து, தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:-
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ரூ.105.70 கோடி மதிப்பில் நாகை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், செம்பனார்கோயில் ஆகிய இடங்களிலும், மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியங்களில் 600-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் பயன்பெறும் வகையில் கூட்டுக் குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 3.39 லட்சம் மக்கள் பயன் அடைவர்.
குடிநீர் திட்டப் பணிகள்: திருச்சி மாவட்டம் முசிறி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, தேனி மாவட்டம் அல்லிநகரம் ஆகியவற்றுக்கு குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணிகளையும், தேனி வடுகபட்டி, பெரியகுளம், திண்டுக்கல் வத்தலகுண்டு, திருப்பூர் வெள்ளக்கோயில், காங்கேயம், ஈரோடு, கரூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஊரகக் குடியிருப்புகளும்,  மூலனூர், தாராபுரம், குண்டடம் உள்ளிட்ட பல்வேறு ஒன்றியங்களைச் சேர்ந்த ஆயிரத்து 262 குடியிருப்புகளும் பயன்பெறும் வகையிலான குடிநீர் திட்டப் பணிகளையும் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
உள்கட்டமைப்பு வசதிகள்: நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களும் திறந்து வைக்கப்பட்டன. 
அதன்படி, கடலூர் நகராட்சி அலுவலகக் கட்டடம், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பூங்கா கிழக்குப் பகுதியில் நகராட்சி அலுவலகக் கட்டடம், திருவாரூர் தியாகப்பெருமாநல்லூரில் பேருந்து நிலையம் ஆகியவற்றையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
சென்னை மாநகராட்சியில் சடையங்குப்பம், மாதவரம், அம்பத்தூர் சி.டி.எச்., சாலை, சிட்கோ சாலை, பாடியில் உள்ள சி.டி.எச். சாலை, அடையாறு திருவீதியம்மன் சாலை, சோழிங்கநல்லூர் சௌடேஸ்வரி நகர், சோழிங்கநல்லூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, நொளம்பூர் திட்டப் பகுதி 2, ராமாபுரம் ராயலா நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்டப்பட்ட பூங்காக்களையும் முதல்வர் பழனிசாமி திறந்தார்.
சென்னை மாநகரத்தில் அதிகதிறன் கொண்ட சோடியம் ஆவி விளக்குகள் மற்றும் இதர தெரு விளக்குகளை எல்.இ.டி., விளக்குகளாக மாற்றி அமைக்கப்பட்ட புதிய திட்டப் பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார். 
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன், கடம்பூர் ராஜூ, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT