தமிழ்நாடு

சவால்களைச் சந்திக்க புத்தக வாசிப்பு உதவும்: முதல்வர்

DIN


சவால்களைச் சந்திப்பதற்கு புத்தக வாசிப்பு பெரும் துணையாக இருக்கும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். 
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் (பபாசி) சார்பில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டு மைதானத்தில் 42-ஆவது சென்னை புத்தகக் காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு புத்தக விற்பனையைத் தொடக்கி வைத்து பபாசி விருதுளை வழங்கிப் பேசியது: 
நமது முன்னோர் அறிவையும், அனுபவத்தையும் ஆவணப்படுத்தி நமக்கு சொத்தாக வழங்குவது நூல்கள்தான். ஆயிரமாயிரம் மலர்களின் மகரந்தச் சேகரமே தேன்கூடாக மாறுகிறது. ஆயிரமாயிரம் கருத்துகளின் சேகரமே புத்தகங்கள். இவை வெறும் காகித கற்றை அல்ல; அவை உண்மை ஊற்றுக்கண். 
இளமையில்தான் மிகச் சிறந்த பண்புகள் பதியம் போடப்படுகின்றன. நூல்கள் வாசிக்கும் ஆர்வத்தை இளமையிலேயே ஊட்ட வேண்டும். பிள்ளைகள் பெற்றோர் சொல்வதிலிருந்து கற்றுக் கொள்வதை விட பெற்றோர் செய்வதைப் பார்த்து மிகுதியாகக் கற்றுக் கொள்கிறார்கள். எனவே முதலில் பெற்றோர் நூல்கள் வாசிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். படிக்க, படிக்க அறிவு வளரும் என்பதை பெற்றோர் குழந்தைகளுக்குச் சொல்லித்தர வேண்டும். ஏனெனில் சிக்கல்களை எதிர்கொள்வதற்கும், சவால்களைச் சந்திப்பதற்கும் புத்தக வாசிப்பு பெரும் துணையாகிறது. 
8 கோடியே 49 லட்சம் நூலக வாசகர்கள்: தமிழக அரசின் சார்பில் 4,622 நூலகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் 8 கோடியே 10 லட்சம் மதிப்பிலான நூல்கள் கைவசம் உள்ளன. மொத்தம் 8 கோடியே 49 லட்சம் வாசகர்கள் இந்த நூலகங்களைப் பயன்படுத்துகின்றனர். சென்னையில் உள்ள கன்னிமாரா நூலகத்தில் ஒரு நிரந்தர புத்தகக் கண்காட்சியை கடந்த 2004-இல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஏற்படுத்தினார். அந்தக் கண்காட்சி கடந்த 15 ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. பொதுவாக ஆண்டுதோறும் 10 அல்லது 12 நாள்கள் நடைபெறும் இந்த புத்தகக் காட்சி இந்த ஆண்டு 17 நாள்கள் நடைபெறுவது புத்தகங்களை விரும்பிப் படிக்கும் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்தி அதிகளவில் புத்தகங்களை வாங்கிப் பயன்பெற வேண்டும் என்றார். 
பபாசி விருதுகள்: முன்னதாக பபாசி வழங்கும் சிறந்த நூலகர் விருது- ச.இளங்கோ சந்திரகுமார், சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான அழ.வள்ளியப்பா விருது-சபீதா ஜோசப், சிறந்த தமிழறிஞருக்கான பாரி செல்லப்பனார் விருது- க.ப.அறவாணன், சிறந்த ஆங்கில எழுத்தாளருக்கான ஆர்.கே.நாராயண் விருது- காயத்ரி பிரபு, சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பகச் செம்மல் க.கணபதி விருது- முல்லைப் பதிப்பகத்தைச் சேர்ந்த முல்லை பழனியப்பன், சிறந்த பெண் எழுத்தாளருக்கான முதல் பெண் பதிப்பாளர் வனிதா பதிப்பகம் அம்சவேணி பெரியண்ணன் விருது- ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஜி.திலகவதி, சிறந்த விற்பனையாளருக்கான பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பன் விருது- ஹிக்கின்பாதம்ஸ், சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான நெல்லை சு.முத்து விருது- கோவி.பழநி ஆகியோருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். 
புத்தகக் காட்சி தொடக்க விழாவுக்கு தொழிலதிபர் நல்லிகுப்புசாமி தலைமை வகித்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், பபாசி தலைவர் வயிரவன், செயலாளர் ஏ.ஆர்.வெங்கடாசலம், துணைத் தலைவர் மயிலவேலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

SCROLL FOR NEXT