தமிழ்நாடு

இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை அலுவலர்களுக்கான பயிற்சி நிறைவு

DIN


சிவகங்கை அருகே உள்ள இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தில் 16 வாரங்கள் நடைபெற்று வந்த அலுவலர்களுக்கான பயிற்சி நிறைவுற்றதை அடுத்து, அவர்களை எல்லைக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், இலுப்பகுடியில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை பயிற்சி மையம் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு, கடந்த 16 வாரங்களாக மருத்துவம், மண்டலம் மற்றும் துணை நிலையிலான கமாண்டோக்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் அலுவலர்களாக 25 பேர் பயிற்சி பெற்றனர். இவர்களுக்கான பயிற்சி முடிவடைந்ததை அடுத்து, இவர்களை நாட்டின் எல்லை பாதுகாப்புப் படைக்கு அனுப்பி வைக்கும் விழா நடைபெற்றது. இந்த மையத்தில், இதுபோன்று அலுவலர்களுக்குப் பயிற்சி அளிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 
இவ்விழாவுக்கு, இலுப்பகுடி இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படையின் டி.ஐ.ஜி. ஆஸ்டின் ஈபன் தலைமை வகித்தார். எல்லை பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநர் (டைரக்டர் ஜெனரல்) சுர்ஜித் சிங் தேஜ்வால் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, பயிற்சி பெற்ற அலுவலர்களுக்கு பதக்கங்களையும், சாகச நிகழ்ச்சிகளில் சிறந்து விளங்கிய வீரர்களுக்குப் பரிசுகளையும் வழங்கி கௌரவித்தார்.
விழாவில், ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், எல்லை பாதுகாப்புப் படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சுர்ஜித் சிங் தேஜ்வால் மற்றும் ஆஸ்டின் ஈபன் ஆகியோர் திறந்த ஜீப்பில் சென்று, வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து, தேசியக் கொடியை முன்னிறுத்தி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 
அதன்பின்னர், வீரர்கள் கராத்தே, கயிறு ஏறுதல், தீ வளையத்துக்குள் பாய்ந்து சாகசம், துப்பாக்கிகளை கையாளுதல், நடனம் உள்ளிட்ட சாகசங்களை செய்து காண்பித்தனர். இதை, இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை பயிற்சி மைய வீரர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT