புது தில்லி: பொங்கல் பரிசாக ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்குவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை நீக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் முறையீடு செய்யப்பட்டது.
முறையீட்டை விசாரித்த நீதிமன்றம், முறையீடு செய்ய வேண்டாம். வேண்டும் என்றால் உச்ச நீதிமன்றத்தில் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என்று தமிழக அறிவித்து, கடந்த திங்கட்கிழமை முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தமிழக அரசு அறிவித்த ரூ. 1000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பை வசதி படைத்தவர்களுக்கு வழங்க உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
இதன் காரணமாக அரிசி பெறும் அட்டைதாரர்களுக்கு மட்டுமே இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு கிடைக்கும் நிலை ஏற்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவை சமூக ஆர்வலர் டேனியல் ஜேசுதாஸ் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருள்களுடன் ஆயிரம் ரூபாயும் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பரிசுத் தொகுப்பு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் எந்தவிதமான பாகுபாடின்றி வழங்கப்படுகிறது. அண்மையில் கஜா புயல் வீசிய மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் இன்னும் முடியவில்லை. இந்த நிவாரணப் பணிகளுக்காக திருவாரூர் தொகுதிக்கான இடைத் தேர்தலே தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என தமிழக ஆளுநர் அறிவித்தார். இந்த பரிசுத் தொகுப்பின் மூலம் தமிழகத்தில் உள்ள சுமார் 2 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தற்காலிக நிவாரணம் வழங்க ரூ. 2 ஆயிரத்து 709 கோடி தேவை எனவும், பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களைச் சீரமைக்க ரூ.15 ஆயிரத்து 190 கோடி தேவை எனவும் தமிழக அரசு மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தது. ஆனால் மத்திய அரசு வெறும் ரூ.900 கோடி மட்டுமே வழங்கியுள்ளது. இந்தச் சூழலில் தமிழக அரசின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழக அரசுக்கு வரி உள்ளிட்ட பிற வகைகளில் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 616 கோடி வருவாய் கிடைக்கிறது. செலவு உள்ளிட்ட வகையினங்களில் ரூ. 3 லட்சத்து 55 ஆயிரத்து 845 கோடி செலவாகிறது. இதுதவிர தமிழக அரசு ரூ.43 ஆயிரத்து 962 கோடி புதிய கடன் கோரியுள்ளது. எனவே, இந்த பொங்கல் பரிசுத் தொகை தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் பி.ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயணும், மனுதாரர் தரப்பில் என்.மனோகரன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அப்போது நீதிபதிகள், பொங்கல் பரிசாக கொடுக்கப்படும் ரூ.1000 யாருடைய பணம், மக்களின் வரிப்பணம், இந்த பணத்தைக் கொண்டு சாலை, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காகப் பயன்படுத்தாலமே எனக் கேள்வி எழுப்பினர். அப்போது அரசு தலைமை வழக்குரைஞர், இது அரசின் கொள்கை முடிவு. எனவே இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றார்.
மேலும் படிக்க: பொங்கல் பரிசுத் தொகுப்பு: ஆதார் அட்டை அவசியம்
அப்போது, தவறாக இருக்கும் போது அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியும். இந்தப் பரிசுத்தொகையை ஆளும் கட்சியின் நிதியில் இருந்து கொடுத்தால், இதுபோன்ற கேள்வி எழாது. அதே நேரத்தில் மக்களின் வரிப் பணத்தில் இருந்து கொடுக்கும்போது, இதுபோன்ற கேள்விகள் வரும். இந்த பொங்கல் பரிசுத் தொகையை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொடுப்பதற்கு பதிலாக வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே கொடுத்தால் என்ன? நீதிபதிகளுக்கும், அரசு தலைமை வழக்குரைஞருக்கும் அரசு வழங்கும் இந்த ரூ.1000 தேவை தானா எனக் கேள்வி எழுப்பினர்.
இதனையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தேர்தல் அறிக்கையில் இதுபோன்ற ஒரு அறிவிப்பு இல்லாத நிலையில், இந்த பரிசுத் தொகை வழங்க காரணம் என்ன? மேலும் மனுதாரர் கூறுவது போல் அரசு கடுமையான நிதிச் சுமையில் இருக்கும்போது வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் பொங்கல் பரிசுத்தொகையை வழங்கினால் என்ன? எனவே, பொங்கல் பரிசாக ரூ.1000 அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்குவது வீண் செலவு என்ற குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக கருதுகிறோம். எனவே அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கத் தடை விதிக்கப்படுகிறது. அதாவது, நியாய விலைக் கடைகளில் இருந்து எந்த பொருளும் வேண்டாம், சர்க்கரை மட்டும் போதும் என குறிப்பிட்டுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கத் தடை விதிக்கப்படுகிறது எனத் தெரிவித்தனர்.
ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசை விட்டுத் தரலாம்: தமிழக அரசு அழைப்பு
ஆயிரம் ரூபாயுடன் நியாய விலைக் கடைகளில் அளிக்கப்பட்டு வரும் பொங்கல் பரிசை விட்டுத் தர தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான வாய்ப்புகளை உணவுத் துறையின் இணையதளத்தில்(www.tnpds.gov.in) வழங்கியுள்ளது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாயுடன் ஒரு கிலோ அரிசி, சர்க்கரை, உலர் திராட்சை, கரும்பு ஆகியன வழங்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டம் கடந்த திங்கள்கிழமை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு: கடந்த மூன்று நாள்களாக ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோருக்கு மட்டுமே அதனை வழங்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, எத்தனை பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த பரிசுத் தொகுப்பைப் பெறுவதற்காக நியாய விலைக் கடைகளில் மக்கள் கூட்டம் தினமும் அலைமோதி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பணியில் போலீஸார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
விட்டுத் தர வாய்ப்பு: நீதிமன்ற உத்தரவு, பல்வேறு விமர்சனங்களுக்கு இடையே, ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதனை விட்டுத் தர விருப்பம் உள்ளோர் அதற்கான வாய்ப்பினை உணவுப் பொருள் வழங்கல் துறையின் இணையதளத்திலும், செயலியிலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எப்படிச் செல்லலாம்? உணவுப் பொருள் வழங்கல் துறையின் (www.tnpds.gov.in) முகப்புப் பக்கத்தில் பயனாளர் நுழைவுப் பிரிவு உள்ளது. இதிலிருந்து உள்நுழைந்தால் உணவுத் துறையில் பதிவு செய்துள்ள செல்லிடப்பேசி எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். இதன்பின், அந்த செல்லிடப் பேசிக்கு ஒருமுறை பயன்படுத்தும் எண் குறுஞ்செய்தியாக வரும்.
இந்த எண்ணைப் பதிவிட்டு உள்ளே சென்றால், பொங்கல் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாயை விட்டுத் தருவதற்கான வாய்ப்பு இருக்கும். அந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி பொங்கல் தொகுப்பு, ஆயிரம் ரூபாயை விட்டுத் தரலாம். நீதிமன்ற உத்தரவு, பல்வேறு விமர்சனங்களுக்கு இடையே தமிழக அரசு இந்தவொரு வாய்ப்பினை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.