நாகை அருகே கடல் நீர் உள்புகுந்ததால் கிராம மக்கள் அச்சம்
நாகையை அடுத்த நாகூர், பட்டினச்சேரி கடலோர கிராமத்தில் கடல் நீர் படிப்படியாக உள்புகுந்து வருவதால், அந்த கிராம மக்கள்
நாகையை அடுத்த நாகூர், பட்டினச்சேரி கடலோர கிராமத்தில் கடல் நீர் படிப்படியாக உள்புகுந்து வருவதால், அந்த கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நாகை மாவட்டத்தில் உள்ள 51 கடலோர கிராமங்களில் ஒன்று நாகூரைஅடுத்துள்ள பட்டினச்சேரி கிராமம். இக்கிராமத்தில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராம மக்கள், கடல் நீர் உள்புகுவதைத் தடுக்கும் வகையில், கருங்கல் பாறைகளைக் கொட்டி தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என 4 ஆண்டுகளாக அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும், இதுவரை நடவடிக்கையில்லை.
இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை கடலில் ஏற்பட்ட சீற்றம் காரணமாக, சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு கடல் நீர் உள்புகுந்தது. இதனால், கடற்கரையோரமிருந்த தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதன் காரணமாக பட்டினச்சேரி கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதுகுறித்து பட்டினச்சேரி கிராம பஞ்சாயத்து தலைவர் சி. நாகரெத்தினம் கூறியது:
சுனாமிக்குப் பின்னர், கடந்த 4 ஆண்டுகளாக படிப்படியாக சுமார் 300 மீட்டர் வரை கடல் நீர் உள் புகுந்துள்ளது.
நாகூர் முதல் நாகப்பட்டினம் துறைமுகம் வரை கடலோரத்தில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், அரசு நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வருகிறது.
இதேநிலை நீடித்தால், பட்டினச்சேரி முழுவதும் கடல் நீர் புகுந்துவிடும். இப்பகுதி மக்கள் மாற்று இடத்துக்கு செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
ஆகையால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும், கடல் நீர் உள்புகுவதைத் தடுக்கும் வகையிலும், பட்டினச்சேரி முதல் நாகூர் சில்லடி கடற்கரை வரை கடலோரத்தில் தடுப்புச்சுவர் அமைக்க அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.