ஆள் பற்றாக்குறை போன்ற காரணங்களால், நிலக்கடலை சாகுபடியில் இயந்திரமயத்துக்கு மாறிய சூழலில், கடலை நடவு இயந்திரத்துக்காகக் காத்திருக்கின்றனர் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள்.
இந்தியா இறக்குமதி செய்யப்படும் பொருள்களில் கச்சா எண்ணெய், தங்கத்துக்கு அடுத்து உணவு எண்ணெயைக் குறிப்பிடலாம். அதாவது, ஆண்டுக்கு 140 லட்சம் டன் உணவு எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்தியாவில் 16.5 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் எண்ணெய் வித்துக்களான சூரியகாந்தி, நிலக்கடலை, எள் மற்றும் ஆமணக்கு போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இதன் மூலம் சுமார் 10 மில்லியன் டன் மகசூல் கிடைக்கிறது.
மானாவாரி பயிர்: இந்தியப் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக உள்ள எண்ணெய் வித்துப் பயிர்களில் நிலக்கடலைப் பயிரானது 80 சதவீதம் மானாவாரியிலும், 20 சதவீதம் இறவையிலும் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும்பாலும் மானாவாரி பயிராக நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. நிலக்கடலையை அதிகளவிலான குறு விவசாயிகளே சாகுபடி செய்கின்றனர்.
ஏர் உழவு: நிலக்கடலை நடவுக்கு நிலத்தின் ஈரம் முக்கியம். குறிப்பாக, மழை பெய்த இரு நாள்களில் நிலக்கடலை விதையை விதைக்க வேண்டும். கடந்த காலங்களில் விவசாயிகள் ஏர் உழவு மூலம் நிலக்கடலையை விதைத்து வந்தனர். இரண்டு மாடுகளை பூட்டி, உழவு செய்வதன் மூலம் கால விரயம் ஏற்பட்டது. ஒரு நாளைக்கு ஓர் ஏக்கர் பரப்பளவில் விதைப்பு செய்ய 6 முதல் 8 மணி நேரம் ஆகும். பருவமழை பொய்த்தல், ஏர் உழுவு செய்யும் ஆள்கள் பற்றாக்குறை, அதிகக் கூலி, மாடுகளின் எண்ணிக்கை குறைவு போன்ற பல்வேறு காரணங்களாலும், விளைநிலத்தில் ஈரப்பதம் இருக்கும்போது நிலக்கடலையை விதைக்க வேண்டும் என்ற கட்டாயம் போன்ற சூழ்நிலைகளாலும் நிலக்கடலை சாகுபடியை விவசாயிகள் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
நவீன இயந்திரத்தின் பயன்பாடு: நீரின்மை, சாகுபடிச் செலவு அதிகரிப்பு, லாபம் குறைவு போன்ற காரணங்களால் நிலக்கடலை பயிரைச் சாகுபடி செய்யும் விவசாயிகளைக் காக்கும் வகையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களால் சாகுபடிச் செலவைக் குறைக்க உழவு முதல் அறுவடை செய்து காய்கள் பிரித்தெடுக்கும் வரையில் நவீன இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அத்தகைய நவீன கருவிகளை நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
கருவி மூலம் விதைப்பு: விதைப்புக்குத் தயார் செய்யப்பட்ட விளைநிலத்தில் விதைக்கும் கருவியை டிராக்டர் அல்லது பவர்டிரில்லருடன் இணைத்து, விதைப் பெட்டியில் தரமான விதைகளைக் கொட்டி டிராக்டர் இயக்கும்போது விதை நிரப்பப்பட்ட பெட்டியுடன் இணைக்கப்பட்ட குழாய்கள் மூலம் விதைக்கப்படுகிறது. டிராக்டரை சீரான வேகத்தில் இயக்கும்போது, விதையானது தேவைப்படும் ஆழத்தில் சீராக விதைக்கப்படுகிறது.
விதைப்புக்கு காத்திருக்கும் விவசாயிகள்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த மழையால், நிலக்கடலை சாகுபடிக்காக விளைநிலங்களை தயார்படுத்திய விவசாயிகள் பருவ மழைக்காகவும், நவீன இயந்திரத்தில் மூலம் விதைக்கவும் காத்திருக்கின்றனர்.
இத்தகைய நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளின் மனவோட்டத்தை அறிந்த திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர்கள் 10-க்கும் மேற்பட்ட நவீன விதைப்பு இயந்திரங்களுடன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முகாமிட்டுள்ளனர்.
இதுகுறித்து திருச்செங்கோட்டைச் சேர்ந்த மணிவேல் (42) தெரிவித்தது: 20-க்கும் மேற்பட்டோர் குழுவாக கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வந்துள்ளோம். நிலக்கடலை விதைப்புக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.1,200 கட்டணமாக வசூலிக்கிறோம். ஒரு நாளைக்கு 6 முதல் 7 மணி நேரம் விதைப்புப் பணியில் ஈடுபடுவோம். மழை பெய்த மூன்று நாள்களில் விதைப்புப் பணிகளை முடித்துவிட்டு ஊர் திரும்பத் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.
கிருஷ்ணகிரியை அடுத்துள்ள வள்ளூவர்புரம் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயியும், முன்னாள் ராணுவ வீரருமான கே.கிருஷ்ணன் (48) கூறியது: கடந்த 5 ஆண்டுகளாக விதைப்பு இயந்திரம் மூலம் நிலக்கடலை சாகுபடி செய்து வருகிறேன். மானாவாரியில் நிலக்கடலை சாகுபடி செய்தாலும், தெளிப்பான் மூலம் பயிருக்கு நீர் பாய்ச்சுகிறேன். நவீன இயந்திரங்கள் பயன்படுத்துவன் மூலம் ஒரு பயிரில் 32 நிலக்கடலை மணிகள் கிடைக்கின்றன. இயந்திரம் மூலம் விதைப்பு செய்வதால் 5 முதல் 10 மூட்டை கூடுதலாக மகசூல் கிடைக்கிறது. என்னுடைய சொந்தப் பயன்பாட்டுக்கு மட்டுமல்லாமல், அருகில் உள்ள கிராமங்களிலும் இயந்திரம் மூலம் விதைப்பு செய்வதால், கூடுதலாக வருவாய் கிடைக்கிறது என்றார்.
நிலக்கடலை சாகுபடியில் விதைப்புக் கருவி, களையெடுக்கும் கருவி, அறுவடை செய்யும் கருவி, நிலக்கடலையிலிருந்து விதையை தனியாக பிரித்தெடுக்கும் கருவி என இயந்திரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகளுக்கு செலவினங்கள் குறைந்து, வருவாய் கூடும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நிலக்கடலை விதைப்பு இயந்திரங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அல்லது வேளாண் பொறியியல் துறையைத் தொடர்பு கொண்டு இயந்திரங்களை வாங்கி விவசாயிகள் பயன்பெறலாம் என கிருஷ்ணகிரியில் செயல்படும் வேளாண் அறிவியல் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் தோ.சுந்தர்ராஜ் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.