தமிழ்நாடு

பார்வையற்ற தமிழக மாணவருக்கு எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்கை: உச்சநீதிமன்றம் உறுதி செய்தது

DIN


பார்வையற்ற தமிழக மாற்றுத் திறனாளி மாணவருக்கு எம்பிபிஎஸ் சேர்க்கை வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இது தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திருநெல்வேலி மாவட்டம், தென்காசி அருகே மேலகரத்தைச் சேர்ந்தவர் விபின். இவருக்கு 75 சதவீத பார்வைத் திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி என அரசு சான்றிதழ் வழங்கியுள்ளது. இவர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மாற்றுத் திறனாளிகள் ஒதுக்கீட்டில் அகில இந்திய அளவில் 285-ஆவது இடம் பெற்றார். இவருக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் கிடைத்தது.
இந்நிலையில், கல்லூரியில் சேரச் சென்ற போது, சென்னையில் மாற்றுத் திறனாளிகள் மதிப்பீட்டுக் குழு முன்பு ஆஜராகி சான்றிதழ் பெற்றுச் சமர்ப்பிக்குமாறு விபினுக்கு உத்தரவிடப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் மதிப்பீட்டுக் குழு விபினை பரிசோதித்து அவர் 90 சதவீத பார்வைத் திறன் குறைபாடு உள்ளவர் என சான்றிதழ் வழங்கியது. இதையடுத்து, இந்திய மருத்துவ கவுன்சில் விதிப்படி 40 சதவீதத்துக்கு மேல் பார்வைத் திறன் குறைபாடு உடையவர்களுக்கு மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கு சீட் வழங்க முடியாது என்று கூறி விபினுக்கு சேர்க்கை மறுக்கப்பட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விபின் மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த தனி நீதிபதி, மாற்றுத்திறன் மாணவருக்கு மருத்துவ சீட் மறுப்பது மாற்றுத் திறனாளிகள் சட்டத்துக்கு எதிரானது. எனவே, மனுதாரருக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை வழங்க வேண்டும். அந்த இடம் நிரப்பப்பட்டிருந்தால், வேறு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சுகாதாரத் துறைச் செயலர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஜூன் 26-இல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், பார்வைக் குறைபாடுள்ள மாணவர் விபினுக்கு எம்பிபிஎஸ் சேர்க்கை வழங்கும்படி ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை உறுதி செய்ததுடன், இந்த விவகாரத்தில் இந்திய மருத்துவக் கவுன்சில் எந்தவித இடையூறும் செய்யக் கூடாது என்று உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT