தமிழ்நாடு

வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா: அமைச்சர் பங்கேற்பு

DIN


தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டம், கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கட்டாலங்குளத்தில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டம், சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் விடுதலைப் போராட்ட தியாகிகளான மகாகவி பாரதியார், வ.உ.சிதம்பரனார், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகுமுத்துக்கோன், வீரன் சுந்தரலிங்கம், உமறுப்புலவர், வீரன் வெள்ளையத்தேவன் ஆகியோர் பிறந்த மாவட்டம்.
ஒவ்வோர் ஆண்டும் வீரன் அழகுமுத்துக்கோனை சிறப்பிக்கும் வகையில், அவரது உருவச் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அவரது வாரிசுதாரர்கள் அரசின் சார்பில் கெளரவிக்கப்படுகின்றனர் என்றார் அவர்.
அதனைத் தொடர்ந்து, கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் சார்பில் முதல்வரின் சூரிய மின்சக்தியுடன்கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின்கீழ் 13  பேருக்கும், வருவாய்த் துறை சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் உதவித் தொகை மற்றும் இலவச வீட்டுமனைப் பட்டா 98  பேருக்கும், அம்மா மகளிர் திட்டத்தின்கீழ் இருசக்கர வாகனத்துக்கான சுழல் நிதி 87 பேருக்கும் என மொத்தம் 230 பயனாளிகளுக்கு ரூ.97.08 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.
முன்னதாக, கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வாரிசுதாரர்களான வனஜா, மீனாட்சி, அழகுமுத்தம்மாள், ராஜேஸ்வரி, சின்னத்துரைச்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் தலைமையில், நெல்லை சரக டிஐஜி பிரவீண்குமார் அபிநபு, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அருண்பாலகோபாலன் ஆகியோர் மேற்பார்வையில் 5 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 12 துணைக் கண்காணிப்பாளர்கள், 45 ஆய்வாளர்கள் உள்பட 1,200  போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்

SCROLL FOR NEXT